புதுடெல்லி:
500 ஏக்கர் பரப்பளவுள்ள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டலத்தில் புதிதாக சட்டப் பல்கலைக்கழகம் மற்றும் ஒருங்கிணைந்த நீதிமன்றக் கட்டிடங்களை கட்ட இருந்த தடையை மகாராஷ்டிர மாநில அரசு நீக்கியது.
கடந்த 2016-ம் ஆண்டு மும்பையில் உள்ள கோரேகாவ் பகுதியில் உள்ள 500 ஏக்கர் பரப்பளவில் சட்டப் பல்கலைக்கழகம், ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள், மாநில மனித உரிமை ஆணையம் அமைக்கவும், மெட்ரோ ரயில் நிலையம் தொடங்கவும் மகாராஷ்டிர மாநில பாஜக அரசு முடிவு செய்தது.
அரசு கையகப்படுத்த நினைத்த 500 ஏக்கர் பரப்பளவு பகுதி, புதிய வளர்ச்சித் திட்ட முன்வடிவை முதலில் வெளியிட்டபோது, பசுமைப் பகுதி என்று அடையாளப்படுத்தப்பட்டிருந்தது.
கடந்த 2016-ம் ஆண்டு இந்த வளர்ச்சித் திட்ட முன்வடிவை மக்களின் பார்வைக்கு பாஜக அரசு வைத்தது. அரசு கையகப்படுத்த நினைக்கும் 500 ஏக்கரும் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட்ட மண்டலம். 25 மீட்டர் அகன்ற பரப்பளவுள்ள கடற்கரை சாலைப் பகுதி தவிர, ஏனை பகுதியில் கட்டுமானப் பணி கூடாது என மும்பை மாநகராட்சி கூறியது.
இதன் பிறகு நடந்த கருத்துக் கேட்புக் கூட்டத்துக்குப் பிறகு அரசு புதிய வளர்ச்சித் திட்டத்தை அறிவித்தது. அதன்படி, சதுப்பு நிலக்காடுகள், மண் குடியிருப்புகள், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் உப்பு படிவங்கள் ஆகிய இடங்களில் கட்டுமானப் பணி செய்ய தடை நீடிக்கிறது.
மாறாக, இதன் மறு பக்கத்தில் கட்டுமானப் பணிகள் நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இதனையடுத்து, முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தலைமையிலான வளர்ச்சித் திட்டத் துறை, மாற்று இடத்தில் சட்டப் பல்கலைக்கழகம், ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள் உட்பட பல்வேறு கட்டுமானப் பணிகளை தொடர அனுமதி அளித்தது.
அரசின் இந்த முடிவுக்கு மகாராஷ்டிர மாநில எதிர்கட்சித் தலைவர் ராதாகிருஷ்ணா விக்கே பாட்டீல் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
இந்த கட்டுமானப் பணியை ஏற்றுள்ள பைராம்ஜி ஜீஜீபாய் குரூப் நிறுவனத்து ரூ. 80 ஆயிரம் கோடி அளவுக்கு வருவாயை ஈட்டுவதற்காகவே, வளர்ச்சித் திட்ட விதியை பாஜக அரசு திருத்தியுள்ளது.
இங்கு கட்டுமானப் பணி நடத்தக்கூடாது என்று தெரிந்தும், அந்த தடையை அரசு நீக்கியுள்ளது. இது குறித்து உயர் மட்டக்குழு விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்றார்.