டெல்லி:  எம்.பில். படிப்புகளில் சேர வேண்டாம் பல்கலைக்கழக மானிய குழுவான யுஜிசி அறிவுறுத்தி உள்ளது.

முதுநிலை பட்டதாரிகளுக்கான, எம்.பில்., படிப்புக்கு வேலைவாய்ப்புகள் குறைந்து விட்டதால், புதிய கல்வி கொள்கைப்படி, எம்.பில்., படிப்புக்கு, நடப்பு கல்வி ஆண்டு  (2023) முதல், மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டாம் என, யு.ஜி.சி., எனப்படும், பல்கலை மானிய குழு கடந்த ஆண்டே (2021) உயர்கல்வி நிறுவனங்களுக்கு கடிதம் அனுப்பியது.

கற்பித்தல் பணிக்கு M.Phil., தகுதியானது இல்லை என்பதால், M.Phil., படித்திருந்தாலும் அதை ஒரு தகுதியாக குறிப்பிட முடியாது என்று தெரிவித்துள்ள யுஜிசி அறிவித்துள்ளது.

இதையடுத்து, பல மாநிலங்கள் இதைப் பின்பற்றி எம்பில்., படிப்பை நிறுத்துவதாக அறிவித்துள்ளன. தமிழ்நாட்டிலும் சில தனியார் பல்கலைக்கழகங்கள் ஏற்கன எம்.பிஃல் படிப்பை நிறுத்தி உள்ளன. ஆனால் சில கல்வி நிறுவனங்கள் எம்.பில் படிப்பை தொடர்வதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில்,  பல்கலைக்கழக மானியக் குழு மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து,  யுஜிசி செயலர் மணீஷ் ஜோஷி  செய்தியாளர்களிடம் கூறும்போது,  “சில பல்கலைக்கழகங்கள் எம்.பில். படிப்புக்கான விண்ணப்பங்களை வழங்கி, மாணவர் சேர்க்கையில் ஈடுபட்டு வருவதாக பல்கலைக்கழக மானியக் குழுவின் கவனத்துக்கு வந்துள்ளது.

எம்.பில். படிப்பானது அங்கீகரிக்கப்பட்ட படிப்பு அல்ல. 2022 பல்கலைக்கழக மானியக் குழு விதிகள் எண்.14, உயர்கல்வி நிறுவனங்கள் எந்தவித எம்.பில். படிப்புகளையும் வழங்கக்கூடாது என்று தெளிவாக கூறியுள்ளது. எனவே எம்.பில். படிப்புகளுக்கு எந்தப் பல்கலைக்கழகமும் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டாம்.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் 2023-2024 ஆம் கல்வியாண்டுக்கான எம்.பில். படிப்பு சேர்க்கைகளை உடனடியாக நிறுத்துமாறு பல்கலைக்கழகங்களை யுஜிசி கூறியுள்ளது. மாணவர்கள் எந்த வித எம்.பில். படிப்புகளிலும் சேர வேண்டாம் என்று பல்கலைக்கழக மானியக் குழு அறிவுறுத்தியுள்ளது.