அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பிக்கும் இந்தியர்கள் நேரில் வரவேண்டிய நேர்காணல் நடைமுறையை அமெரிக்கா தளர்த்தியுள்ளது.
F, M, மற்றும் J பிரிவு விசாவுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள், H-1, H-2, H-3 மற்றும் L விசாக்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் மற்றும் கலாச்சாரம் மற்றும் அசாதாரண O, P, மற்றும் Q விசாக்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு இந்த விலக்கு அளிக்கப்படுவதாக அமெரிக்க தூதரக அதிகாரி தெரிவித்துள்ளார்.
விசா விண்ணப்பதாரர்களுக்கு இந்த நடைமுறை மிகவும் உதவியாக இருப்பதோடு அவர்களுக்கான அசௌகரியங்களை நீக்கவும் உதவும் என்று அதிபர் ஜோ பைடனின் ஆசிய அமெரிக்க விவகார ஆலோசகரும் தெற்காசிய சமூக தலைவருமான அஜய் ஜெயின் பூடோரியா தெரிவித்தார்.
“இந்த விலக்கு கோர விரும்பும் விண்ணப்பதாரர்கள் இதற்கு முன் அமெரிக்க விசா வழங்கப்பட்டவர்களாக இருக்கவேண்டும். விசா நிராகரிக்கப்பட்டவர்கள் மற்றும் விசாவுக்கு விண்ணப்பிக்க தகுதி இழந்தவர்கள் இந்த வாய்ப்பைப் பெற முடியாது என்றும் இந்த நடைமுறை இந்த ஆண்டு டிசம்பர் 31 வரை அமலில் இருக்கும், மேலும் இந்தியாவில் தங்கியிருக்கும் மற்றும் இந்திய குடிமக்கள் மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்” என்றும் அவர் கூறியுள்ளார்.
2022 மார்ச் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் புது தில்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மற்றும் சென்னை, ஹைதராபாத், கொல்கத்தா மற்றும் மும்பையில் துணை தூதரகங்கள் 20,000 தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு இந்த நடைமுறையை செயல்படுத்த இருக்கிறது.