“சிவன் மற்றும் சக்தியின் புனிதமான சங்கமமான, நாளை மறுநாள் மகாசிவராத்திரியைக் கொண்டாடுவதற்கு சற்று முன்பு, இன்று (இந்தியா மற்றும் இங்கிலாந்து) இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் குறித்த விவாதங்களை மீண்டும் தொடங்குவது மிகவும் நல்ல விஷயம்” என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார்.

இந்தியா-இங்கிலாந்து இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (FTA) குறித்த பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கியுள்ளதால் இரு நாடுகளுக்கும் “வெற்றி” என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மரும் நவம்பர் 2024 இல் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடந்த G20 உச்சிமாநாட்டின் போது சந்தித்து இரு நாடுகளுக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் வர்த்தக பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க முடிவு செய்தனர்.

இதற்கான அதிகாரபூர்வ பேச்சுவார்த்தைகள் இன்று தொடங்கியுள்ளதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

“இந்தியாவும் இங்கிலாந்தும் நெருங்கிய கூட்டாண்மையைக் கொண்டுள்ளன, இது பாதுகாப்பு மற்றும் புதிய மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், காலநிலை, சுகாதாரம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு வழங்குவதன் மூலம் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த தேவையான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது” என்று அமைச்சகம் அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.