லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் இருந்து மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி உள்பட மாநிலங்களவைக்கு 10 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
உத்தரப்பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவைக்கு 10 பேரை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு முன்னரே வெளியிடப்பட்டிருந்தது. தேர்தலில் வேட்பு மனுக்களை வாபஸ் பெற திங்கள் கடைசி நாளாகும்.
இந் நிலையில் மாநிலங்களவைக்கு 10 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். தேர்வானவர்களில் பாஜகவிலிருந்து 8 பேரும், பிஎஸ்பி மற்றும் சமாஜ்வாதி கட்சிகளில் இருந்து தலா ஒருவரும் தேர்வாகி உள்ளனர்.
பாஜக சார்பாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, அருண் சிங், ஹரித்வார் துபே, பிரிஜ் லால், நீரஜ் சேகர், கீதா சாக்யா, சீமா திவிவேதி மற்றும் பி.எல்.வர்மா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பிஎஸ்பி கட்சியில் இருந்து, ராம்ஜி கவுதம் மற்றும் சமாஜ்வாதி கட்சியின் பேராசிரியர் ராம் கோபால் யாதவ் ஆகிய இருவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
பத்தாவது இடத்திற்கான போட்டியில் ராம்ஜி கவுதம் மற்றும் சுயேச்சை வேட்பாளரான பிரகாஷ் பஜாஜ் இடையே பரபரப்பான சூழல் நிலவியது. இறுதியில் ராம்ஜி போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார்.