டெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான மத்தியஅரசு அறிமுகப்படுத்தி உள்ள, அனைவருக்குமான ஒருங்கிணைந்த பென்சன் திட்டம் (Unified Pension Scheme /ups) ஏப்ரல் 1ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.

நாடு முழுவதும்  வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் Unified Pension Scheme என்னும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் நடைமுறைக்கு வருகிறது. இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தின் அவசியம் என்ன ? இதன் முக்கிய அம்சங்கள் என்ன ? நன்மைகள் என்ன ? என்ற விவரங்கள் வெளியாகி உள்ளது.

தேசிய ஓய்வூதிய முறையை (National Pension System) திரும்பப் பெற வேண்டும் என்றும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை (Old Pension Scheme) மீண்டும் கொண்டுவர வேண்டும் என்றும் மத்திய, மாநில  அரசு ஊழியர்களும் ஓய்வூதியம் பெறுபவர்களும் நீண்ட காலமாகவே கோரிக்கை வைத்திருந்தனர்.

இதைத்தொடர்ந்து,  இந்தியர்கள் அனைவருக்கும் ஓய்வூதியப் பலன் கிடைக்கும் வகையில்,பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, Unified Pension Scheme என்னும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது.

இந்த நிலையில், தேசிய ஓய்வூதிய முறை (National Pension System)  மற்றும், பழைய ஓய்வூதியத் திட்டம் ஆகிய இரு ஓய்வூதிய முறைகளிலும் உள்ள முக்கிய அம்சங்களை உள்ளடக்கிய Unified Pension Scheme ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை மோடி தலைமையிலான பாஜக அரசு உருவாக்கி உள்ளது.

சமூகப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், ஓய்வுக்குப் பிறகு மக்கள் மிகவும் கண்ணியமான வாழ்க்கையை வாழ உதவுவதற்கும்  ஏற்புடைய வகையில், இந்த ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த 2024ம் ஆண்டு   ஆகஸ்ட் மாதம், பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை, இந்த ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு (UPS) ஒப்புதல் அளித்தது.  இதையடுத்து 2025ம் ஆண்டு   ஜனவரி 24ம் தேதி, மத்திய அரசு இது திட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட்டது. இதைத்தொடர்ந்து, இந்த புதிய ஓய்வூதியத் திட்டம் வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழைய ஓய்வூதிய திட்டம் (OPS) (OLD PENSION SCHEME ) மற்றும் தேசிய ஓய்வூதிய திட்டம் (NPS ) (NATIONAL PENSION SCHEME) ஆகிய இரண்டின் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டமே இந்த Unified Pension Scheme ஆகும். இது, ஏற்கெனவே உள்ள ஓய்வூதியத் திட்டங்களை எல்லாம் ஒரே கட்டமைப்பின் கீழ் கொண்டு வரும் திட்டமாகும்.

அத்துடன்,   தற்போதுள்ள அடல் ஓய்வூதிய யோஜனா (APY), ஊழியர் ஓய்வூதியத் திட்டம் (EPS-95), பிரதான் மந்திரி கிசான் மந்தன், யோஜனா (PM-KMY), பிரதம மந்திரி ஷ்ரம் யோகி மான் தன் யோஜனா (PM-SYM), ஸ்வாவலம்பன் யோஜனா (தற்போது NPS-லைட்) போன்ற ஏற்கெனவே நடைமுறையில் உள்ள ஓய்வூதிய திட்டங்களும் இந்த புதிய திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கெனவே தேசிய ஓய்வூதிய திட்டத்தில் இருக்கும் ஊழியர்களும், இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பயன் பெற முடியும்.

இந்தியாவில் உள்ள மாநில அரசுகள் விரும்பினால், தங்கள் ஊழியர்களுக்கும் இந்தத் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தைச் செயல்படுத்தலாம் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Unified Pension Scheme எந்தவிதமான வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்டிருக்காது என்பதே இந்த திட்டத்தின் முக்கிய அம்சமாகும்.

18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய இந்தியர்கள் அனைவரும் இந்த திட்டத்தால் பயன்பெறுவார்கள்.

அதாவது, சுயதொழில் செய்பவர்கள், அமைப்புசாரா துறைகளில் உள்ள தொழிலாளர்கள் உட்பட யார் வேண்டுமானாலும் இந்த ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் இணைந்து கொள்ளலாம். அவரவர்கள் தத்தம் ஓய்வூதியத்துக்கு ஒரு சிறு தொகையைப் பங்களித்து பயன் பெற முடியும்.

Unified Pension Scheme திட்டத்தின் கீழ், மத்திய அரசு ஊழியர்கள் தங்கள் அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படியில் 10 சதவீத தொகையை செலுத்த வேண்டும். ஊழியர்கள் செலுத்தும் தொகைக்குச் சமமான தொகையை அரசும் செலுத்தும். மொத்த நிதியில் 8.5 சதவீதத்தை மத்திய அரசு கூடுதலாக இந்த திட்டத்தில் செலுத்தும்.

UPS இன் கீழ், அரசு ஊழியர்கள் தங்கள் அடிப்படை சம்பளத்தில் 10 சதவீதத்தை அகவிலைப்படியுடன் (DA) பங்களிப்பார்கள், அதே நேரத்தில் அரசின் பங்களிப்பு முந்தைய 14 சதவீதத்திலிருந்து 18.5 சதவீதமாக அதிகரிக்கும். இது தவிர, அரசாங்கத்தின் கூடுதல் 8.5 சதவீத பங்களிப்புடன் ஆதரிக்கப்படும் ஒரு தனி தொகுப்பு நிதியும் இருக்கும்.

இதன் விளைவாக, UPS திட்டம் பங்கேற்பாளர்களுக்கு கடந்த 12 மாதங்களின் சராசரி அடிப்படை சம்பளத்தில் 50 சதவீதத்திற்கு சமமான ஓய்வூதியத்தை வழங்குகிறது.

இந்த திட்டத்தின் கீழ், ஒரு ஊழியர் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி இருந்தால், கடைசியாக பணிபுரிந்த 12 மாதங்களுக்கான சராசரி சம்பளத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாகப் பெறுவார். ஒரு ஊழியர் 25ஆண்டுகளுக்கும் குறைவாகப் பணிபுரிந்திருந்தால், அவரது ஓய்வூதியம் அதற்கேற்ப நிர்ணயிக்கப் படும்.

இந்த ஓய்வூதிய திட்டத்தின் பலன் பெற ஒருவர் குறைந்தபட்சம்  10 ஆண்டுகளுக்கு பணிபுரிந்திருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப் பட்டுள்ளது.

10 ஆண்டுகள் பணிபுரியும் ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் 10,000 ரூபாய் மாத ஓய்வூதியமாக வழங்கப் படுகிறது.

மேலும் ஓய்வு பெறும் போது மொத்த தொகையுடன் பணிக்கொடையும் வழங்கப்படுகிறது. ஊழியர் இறந்த பிறகு, அவரது குடும்பத்துக்கு 60 சதவீத குடும்ப ஓய்வூதியம் கிடைக்கிறது.

2036ம் ஆண்டு வாக்கில், 60 வயதுக்கு மேலான இந்தியர்களின் எண்ணிக்கை , 227 மில்லியனைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது மொத்த இந்திய மக்கள் தொகையில் 15 சதவீதமாகும்.

2050 ஆம் ஆண்டு வாக்கில், இந்த எண்ணிக்கை 347 மில்லியனாக கூடும் என்று கணிக்கப் பட்டுள்ளது. இது அப்போதைய நாட்டின் மக்கள் தொகையில் 20 சதவீதமாகும்.

இந்த நிலையில், சமூகப் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தந்து, வருங்கால வைப்பு நிதி மேலும் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்கு முதியோர் ஓய்வூதியத் திட்டங்கள் மற்றும் சுகாதாரக் காப்பீட்டு எனப் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பல மக்கள்நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், இப்போது கொண்டுவரப்பட்டுள்ள, ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (UPS) அரசு ஊழியர்களுக்கு, குறிப்பாக நீண்ட காலமாக அரசாங்கத்தில் பணியாற்றி வருபவர்களுக்கு ஒரு பெரிய வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இந்தத் திட்டம் அவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.