டில்லி

மேசான் நிறுவனம் குறைந்த ஊதியத்தில் அதிக பணிகளை வாங்குவதாக எழுந்த புகாரை விசாரிக்க தெலுங்கானா தொழிலாளர் நலத்துறைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

ஐதராபாத் நகரில் உள்ள அமேசான் நிறுவனத்தில் விஜய் கோபால் என்பவர் பணி புரிந்து வந்தர்.  இவர் ஒரு மனித உரிமை ஆர்வலரும் ஆவார்.  அமேசான் நிறுவனத்தில் அதிக நேரம் பணி புரியச் சொல்வதையும் குறைந்த ஊதியம் அளிப்பதையும் எதிர்த்து இவர் தெலுங்கானா தொழிலாளர் நல ஆணையருக்குப் புகார் அளித்துள்ளார்.  இவரை நிர்வாகம் பணி நீக்கம் செய்துள்ளது.

இதையொட்டி அவர் மத்திய அரசின் தொழிலாளர் நல ஆணையத்துக்கு அளித்த புகாரில், “நான் அமேசான் நிறுவனத்தில் மேலாளராகப் பணி புரிந்தேன்.   அங்கு அவர்கள் சட்டவிரோதமாகப் பணி நேரம் நியமித்துள்ளதையும் தவறான கணக்கின் மூலம் ஊதியத்தைக் குறைவாக அளிப்பதையும் குறித்து புகார் அளித்தேன். அதையொட்டி அவர்கள் எவ்வித காரணமும் இன்றி என்னைப் பணி நீக்கம் செய்துள்ளனர்.

நான் இதற்கான காரணத்தைக் கேட்ட போது இனி எனது பணி அவர்களுக்கு தேவைப்படாது எனத் தெரிவித்தனர்.  ஆனால் இதற்கு முக்கிய காரணம் நான் இந்த நிறுவனம் குறித்து தெலுங்கானா மாநில தொழிலாளர் நல ஆணையத்துக்குப் புகார் அளித்ததாகும்.    அமேசான் நிறுவனத்தில் இது போல் தவறான கணக்கெடுப்பால் 30000 பேருக்கு மேல் குறைவான ஊழியர்கள் அவதிப்படுகின்றனர்” எனத் தெரிவித்தார்.

அவருடைய புகாரின் அடிப்படையில் மத்திய தொழிலாளர் நலம் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகம் இந்த புகார் தெலுங்கானா மாநில அரசு சம்பந்தமானது எனப் பதில் அளித்துள்ளது.  மேலும் இது குறித்து விசாரித்து தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் எனத் தெலுங்கானா தொழிலாளர் நலத் துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட்டுள்ளது.