சென்னை: மாநில ஆளுநர்களுக்கு எதிராக, பல்கலைக்கழக வேந்தர் விவகாரத்தில்  உச்சநீதிமன்றம் வழங்கிய  தீர்ப்பு சலசலப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இந்த  எதிராக மத்தியஅரசு  உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவலை,  மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக வேந்தர் நியமனம் தொடர்பாக தமிழ்நாடு அரசு இரு முறை சட்டம் இயற்றிய நிலையிலும், அதற்கு ஆளுநர் அனுமதி வழங்க மறுத்ததுடன், அந்த மசோதாக்களை குடியரசு தலைவரின் பார்வைக்கு அனுப்பி வைத்தார். இதை எதிர்த்து தமிழ்நாடு அரசு   தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஆளுநரின் நடவடிக்கையை கடுமையாக விமர்சித்ததுடன்,   அளித்த தீர்ப்பில் உச்சநீதிமன்றம் ஆளுநருக்கு காலக்கெடு விதித்ததோடு மட்டுமின்றி, குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும் மசோதாக்கள் மீது அவர் 90 நாட்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என்றும் கூறியது.

உச்சநீதிமன்றம்,  நாட்டின் முதல் குடிமகனான குடியரசு தலைவருக்கு 3 மாதம் கெடு விதித்த விவகாரம் சலசலப்பை ஏற்படுத்தியது. மேலும், ஏற்கனவே பல்கலைக்கழக வேந்தராக மாநில முதல்வர் இருக்கும் வகையில் மேற்குவங்கம் இயற்றிய மசோதாவை குடியரசு தலைவர் தள்ளுபடி செய்த நிலையில், அதை மீறி உச்சநீதிமன்றம் தமிழ்நாடு அரசு தொடர்பான வழக்கில், தமிழ்நாடு அரசின் பல்கலைக்கழக வேந்தர் தொடர்பான 10 மசோதாக்களுக்கும் சிறப்பு அதிகாரத்தின் பேரில் ஒப்புதல் வழங்கியதும் விமர்சனங்களை ஏற்படுத்தியது.

இந்த தீர்ப்பு குறித்து மத்திய சட்ட அமைச்சகம் ஆய்வு செய்து வந்த நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் பார்திவாலா, மகாதேவன் வழங்கிய  தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனுத் தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது. இது குறித்து விரைவில் முடிவு செய்யப்பட்டு மனு தாக்கல் செய்யப்பட இருப்பதாக  மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் வெங்கட் ரமணி தெரிவித்துள்ளார்.

மேலும்,   தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் குடியரசுத் தலைவர் பிரதிவாதியாக இல்லாதபோது, குடியரசுத் தலைவரின் அதிகாரம் குறித்து, அவர் தரப்பு வாதங் களைக் கேட்காமல் எவ்வாறு இது போன்ற உத்தரவுகளை நீதிமன்றம் பிறப்பிக்க முடியும் என்றும் வெங்கட் ரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த விவகாரம் கருத்து தெரிவித்துள்ள  மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள், மாநில அரசின் மசோதாக்களை அங்கீகரிப்பதில் ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவரின் பங்கு குறித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, காலாவதியான மசோதாவை சட்டமாக்க வழிசெய்து விடும் என தெரிவித்துள்ளனர்.

அரசியலமைப்பு சட்டத்தின்படி, மசோதாவை திருப்பி அனுப்பினாலோ அல்லது குடியரசுத் தலைவரால் நிறுத்தி வைக்கப்பட்டாலோ அந்த மசோதா காலாவதியாகி விடும் என்றும் தெரிவித்தனர்.

உச்சநீதிமன்றம் இதனை கருத்தில் கொள்ளாமல் தீர்ப்பளித்திருப்பதால் சீராய்வு மனு தாக்கல் செய்ய உள்ளதாகவும் உள்துறை அமைச்சக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.