நாமக்கல்: மத்திய கல்விநிதி நிறுத்தத்தால் 32ஆயிரம் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்து உள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளை நேரடியாக சென்று ஆய்வு செய்து வரும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் இன்று காலை நாமக்கல் மாவட்டத்தில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, தமிழ்நாட்டில் கல்வி திட்டம் சிறப்பாக உள்ளது என மத்திய அரசு பாராட்டி உள்ளது. ஆனால் மத்திய அரசு கல்விக்கான நிதியை ஒதுக்கீடு செய்யவில்லை. இதனால் 32 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க முடியவில்லை.
கல்விக்கான 60 சதவீதம் நிதியை ஒன்றிய அரசு தான் வழங்க வேண்டும். இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் கேரளா முதல் இடமும், தமிழ்நாடு 2வது இடத்திலும் இருக்கும் நிலையில் ஒன்றிய அரசின் முடிவால் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
தேசிய கல்விக் கொள்கையை தமிழகத்தில் அமல்படுத்தினால்தான் நிதி வழங்க முடியும் என ஒன்றிய அரசு கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழகத்தில் அண்ணா, கருணாநிதி ஆகியோர் ஏற்கனவே இருமொழி கொள்கையை கொண்டு சமச்சீர் கல்வி கொள்கையை ஏற்படுத்தி விட்டனர்.
தமிழக அரசு பள்ளி வளாகத்திற்குள் தேவை இல்லாதவர்கள் நுழைவதை தடுக்கும் வகையில் விதிமுறைகள் வகுக்கப்பட்டு வருகிறது.
பள்ளி வளாகத்திற்குள் புகுந்து சேதப்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
கல்வியில் பின் தங்கியுள்ள மாவட்டங்களில் நீதி போதனை வகுப்புகள் நடத்தப்பட்டு உள்ளதால் இதுவரை 1½ லட்சம் மாணவர்கள் பயன் பெற்றுள்ளனர்.
இவ்வாறு கூறினார்.
தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் வளர்ச்சிப் பணிகள் சார்ந்த பல்வேறு திட்டங்களுக்கு மத்திய கல்வி அமைச்சகம் நிதியுதவி வழங்கி வருகிறது. மத்திய அரசின் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் இந்த நிதியுதவி தமிழக அரசுக்கு அளிக்கப்படுகிறது. இந்த நிதியை பெற மத்திய அரசின் விரிவான கல்வி மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் விதிமுறைகளை மாநில அரசுகள் பின்பற்ற வேண்டும்.
இதற்கிடையே, மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையில் பிஎம் ஸ்ரீ பள்ளி எனும் திட்டம் உள்ளது. இதன்மூலம் பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், இத்திட்டத்தில் டெல்லி, பஞ்சாப், மேற்கு வங்கம், தமிழகம், கேரளம் ஆகிய மாநிலங்கள் இதுவரை இணையவில்லை. மேலும், தமிழகம் மட்டும் பிஎம் ஸ்ரீ திட்டத்தில் சேர மும்மொழி கொள்கையில் விலக்கு உட்பட சில கோரிக்கைகளை முன்வைத்தது.
ஆனால், அதை ஏற்க மத்திய அரசு மறுத்துவிட்டதால் திட்டத்தில் தமிழகமும் சேராமல் உள்ளது. மறுபுறம் பிஎம் ஸ்ரீ திட்டத்தில் இணையாத மாநிலங்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் நிதியை மத்திய அரசு நிறுத்திவிட்டது. அதன்படி, கடந்த கல்வியாண்டில் (2023-24) 3, 4-வது தவணை நிதியுதவி நிறுத்தப்பட்டது. தொடர்ந்து நடப்பு கல்வியாண்டிலும் (2024-25) ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட நிதியை மத்திய அரசு நிறுத்தியுள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறும்போது, “நடப்பாண்டில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்ட நிதியாக தமிழகத்துக்கு ரூ.3,586 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் மாநில அரசின் பங்களிப்பு ரூ.1,434 கோடியாகும். மீதமுள்ள ரூ.2,152 கோடி நிதி மத்திய அரசால் வழங்கப்படும். இந்த தொகை 4 தவணைகளாக வழங்கப்படும். அதன்படி நடப்பாண்டு, முதல் தவணையாக ரூ.573 கோடி கடந்த ஜூன் மாதமே வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இதுவரை நிதியைத் தராமல் மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.இது தொடர்பாக தமிழக அரசு பல்வேறு முறை வலியுறுத்தியும், மத்திய அரசு செவிசாய்க்கவில்லை. தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ், மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தும் பலனில்லை.
பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டத்தில் இணைந்தால் மட்டுமே நிதியை விடுவிக்க முடியும் என்பதில் மத்திய அரசு திட்டவட்டமாக இருக்கிறது. அந்தத் திட்டத்தை அமல்படுத்தினால் தேசிய கல்விக் கொள்கையின் மும்மொழி கொள்கை உள்ளிட்ட சில வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டிய நிலை ஏற்படும். இதனால் அதை ஏற்பதற்கு தமிழக அரசு மறுத்துவருகிறது. மத்திய நிதி கிடைக்காததால் மாநில அரசின் பங்களிப்பு நிதியை கொண்டு தற்போது திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
ஆனால், நீண்ட காலத்துக்கு இதை கொண்டு சமாளிக்க முடியாது. வரும் மாதங்களில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு சம்பளம், இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர்க்கை பெற்றவர்களுக்கான கல்விக் கட்டணம், ஆசிரியர்களுக்கான பயிற்சிகள், மாணவர்களுக்கான கற்றல் திட்டங்கள் உள்ளிட்ட கல்வி சார்ந்த செயல்பாடுகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது,” என்றனர்.