பத்திரிகையாளர்கள், குடிமக்கள் உள்ளிட்டோரை உளவு பார்க்க பெகாசஸ் ஸ்பைவேர் சட்ட விரோதமாக பயன்படுத்தியதாக கூறப்பட்ட மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், இது குறித்து இடைக்கால உத்தரவு வழங்குவதாகக் கூறி வழக்கை ஒத்திவைத்தது.

மக்களை உளவு பார்க்க ஸ்பைவேர்கள் ஏதாவது சட்ட விரோதமாக பயன்படுத்தப்பட்டதா என்பதை மத்திய அரசு தெளிவு படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் சூர்யா காந்த் மற்றும் ஹிமா கோஹ்லி அமர்வு இந்த வழக்கை இன்று மீண்டும் விசாரணை செய்தனர்.

நாட்டின் பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி இது குறித்து பிரமாணப் பத்திரத்தில் எதுவும் குறிப்பிட முடியாது என்று அரசு தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா நீதிபதிகள் முன்பு அப்போது தெரிவித்தார்.

“தேசிய பாதுகாப்பு தொடர்பான எந்த தகவலையும் நாங்கள் அறிய விரும்பவில்லை, சட்டவிரோதமான ஸ்பைவேர் பயன்பாட்டின் மூலம் சாதாரண குடிமக்களின் உரிமை மீறல் குற்றச்சாட்டுகளில் மட்டுமே நீதிமன்றம் அக்கறை கொண்டுள்ளது” என்பதை இந்திய தலைமை நீதிபதி என்வி ரமணா அடங்கிய பெஞ்ச் மீண்டும் மீண்டும் கூறியது.

“ஸ்பைவேர் பயன்படுத்தப்பட வில்லை என்று மத்திய அரசு கூறினால் அது பயங்கரவாத குழுக்களுக்கு சாதகமானதாக அமைந்து விடும்.

ஒவ்வொரு மென்பொருளிலும் ஒரு எதிர்மறை செயல்பாடு இருக்கும் என்பதால் ஸ்பைவேர் பயன்படுத்தப்பட்டதாக கூறினாலும் தவறாகிவிடும், அதனால் இதுகுறித்து பிரமாண பத்திரத்தில் தெளிவாக குறிப்பிட முடியாது” என்று தலைமை வழக்கறிஞர் மீண்டும் கூறினார்.

இதனையடுத்து, “அரசு எதிர்-பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யும் என்று நாங்கள் நினைத்தோம். ஆனால், இப்போது இடைக்கால உத்தரவுகளை நிறைவேற்றுவதற்கான பிரச்சினை மட்டுமே பரிசீலிக்கப்பட உள்ளது.

2-3 நாட்களுக்குள் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிமன்றம் கூறியது. இதற்கிடையில் ஏதேனும் ‘மறுபரிசீலனை’ இருந்தால், சொலிசிட்டர் ஜெனரல் அதனை குறிப்பிடலாம்” என்றும் நீதிபதிகள் தெளிவுபடுத்தினர்.

பெகாசஸ் உளவு செயலி குறித்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக தெளிவு படுத்தாத நிலையில், இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு மட்டுமே வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.