டெல்லி: பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய கேபினட் கூட்டத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு, அண்மையில் பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை குழு பிரதமர் இல்லத்தில் கூடியது, அந்த கூட்டத்திற்கு பிறகு, வெளியுறவுத்துறை அமைச்சகம் பாகிஸ்தான் மீது விசா ரத்து போன்ற முக்கியமான நடவடிக்கைகளை எடுத்ததது. அதைத் தொடர்ந்து இன்று(ஏப்.30) மீண்டும் பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் அமைச்சரவைக் கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்பு நடைபெறும்போது, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சரவை குழு முடிவெடுத்துள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் தெரிவித்தார்.
இந்த கணக்கெடுப்பு வெளிப்படையான முறையில் பதிவு செய்யப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அத்துடன் காங்கிரஸ் கட்சி சாதி கணக்கெடுப்பை எதிர்த்துள்ளதாகவும் சாதி கணக்கெடுப்பை ஒரு அரசியல் கருவியாக மட்டுமே பயன்படுத்தியுள்ளதாகவும் ம் அவர் குற்றம் சாட்டினார்.
மேலும், சில மாநிலங்கள் சாதிகளைக் கணக்கிட கணக்கெடுப்புகளை சிறப்பாகச் செய்திருந்தாலும், வேறு சில மாநிலங்கள் அரசியல் கோணத்தில் இருந்து மட்டுமே இத்தகைய கணக்கெடுப்புகளை வெளிப்படையான முறையில் நடத்தியதாக தெரிவித்தார்.
“மத்திய அரசின் கீழ் கணக்கெடுப்பு வருகிறது. ஆனால், எதிர்க்கட்சிகள் ஆட்சிகள் செய்யும் மாநிலங்களில் சாதிவாரி என்ற பெயரில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. அரசியல் காரணத்திற்காக அந்த கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டுள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பை உள்ளடக்கிய, நாடு தழுவிய மக்கள் தொகை கணக்கெடுப்பை வெளிப்படையாக நடத்த மோடி அரசு உறுதி பூண்டுள்ளது” என்றார்.
மேலும், 2025ம் ஆண்டுக்கான கரும்புக்கான கொள்முதல் விலை குவிண்டலுக்கு 355 ரூபாய் விலை நிர்ணயம் மற்றும் 22,864 கோடி ரூபாய் மதிப்பில் 166.80 கீமி தொலைவுக்கு அதிவேக பசுமைவழி சாலை அமைக்கும் திட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதாக தெரிவித்தார்.
1931ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பின்படி 4,147 சாதிகள் இருந்ததாக புள்ளி விவரத்தில் தகவல். தற்போது வரை 1931ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பின்படி இட ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. 2011ஆம் ஆண்டில் சமூக பொருளாதார ரீதியில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால் புள்ளி விவரங்கள் வெளியிடப்படவில்லை.