மத்திய அரசு ஊழியர்களுக்கான ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (யுபிஎஸ்) (Unified Pension Scheme – UPS) என்ற புதிய விரிவான ஓய்வூதியத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.

தற்போதுள்ள தேசிய பென்ஷன் திட்டத்தை (NPS) திரும்பப் பெற வேண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை (Old Pension Scheme – OPS) மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று மத்திய மாநில அரசு ஊழியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

அரசுத் துறைக்கான NPS திட்டத்தை மறுஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவின் தலைவராக மத்திய அமைச்சரவை செயலாளராக புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள டி.வி.சோமநாதன் நியமிக்கப்பட்டிருந்தார்.

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் எனும் UPSல் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம்; உறுதி செய்யப்பட்ட குடும்ப ஓய்வூதியம்; உறுதி செய்யப்பட்ட குறைந்தபட்ச ஓய்வூதியம்; பணவீக்க அட்டவணைப்படுத்தல் மற்றும் ஓய்வின் போது பணிக்கொடைக்கு மேலதிகமாக லம்ப்சம் அமவுண்ட் என பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளதாக டி.வி. சோமநாதன் தெரிவித்துள்ளார்.

OPS மற்றும் NPS ஆகிய இரண்டு ஓய்வூதிய திட்டங்களின் அம்சங்களை உள்ளடக்கிய ஒரு கலவையாக புதிய UPS ஓய்வூதிய திட்டம் இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த திட்டத்தால் 23 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயனடைவார்கள் என்றும் இந்த திட்டம் 2025 ஏப்ரல் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் என்பிஎஸ் அல்லது யுபிஎஸ் இரண்டில் ஒன்றைத் தேர்வுசெய்ய ஊழியர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்.

2004ம் ஆண்டு என்பிஎஸ் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து அதில் இணைந்துள்ளவர்கள் இந்த புதிய ஓய்வூதியத்தை தேர்வு செய்யலாம். தவிர, 2025 மார்ச் 31ம் தேதி பணி ஓய்வு பெற உள்ளவர்களும் இந்த திட்டத்திற்கு மாற்றிக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதனால் முதல் ஆண்டில் மத்திய அரசுக்கு நிலுவைத் தொகையாக ₹800 கோடியும்.UPS ஓய்வூதிய திட்டத்திற்காக ₹6,250 கோடியும் செலவாகும் என்று கூறப்பட்டுள்ளது.

புதிய ஓய்வூதிய திட்டத்தின் சிறப்பம்சங்கள் :

உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியம்: குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் சேவையில் இருக்கும் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியமாக ஓய்வு பெறுவதற்கு முந்தைய 12 மாதங்களுக்கான சராசரி அடிப்படைச் சம்பளத்தில் 50 சதவீதத்தை இந்தத் திட்டம் உறுதி செய்கிறது.

குடும்ப ஓய்வூதியம்: மரணம் ஏற்பட்டால், ஓய்வூதியம் பெறுபவரின் குடும்பம் அவர்கள் இறக்கும் போது பெறப்பட்ட ஓய்வூதியத்தில் 60 சதவீதம் பெறும்.

குறைந்தபட்ச ஓய்வூதியம்: குறைந்தபட்சம் 10 வருட சேவைக்குப் பிறகு அரசு ஊழியர்களுக்கு ஓய்வுக்குப் பிறகு மாதம் ₹ 10,000 இத்திட்டம் உறுதி செய்கிறது.

யுபிஎஸ் திட்டத்தில் ஓய்வூதியத்திற்கான மத்திய அரசின் பங்களிப்பு தற்போதைய 14 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக அதிகரிக்கப்படும்.