டில்லி:
விஜய் மல்லையாவை தொடர்ந்து, பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.12,700 கோடியை நிரவ் மோடி சுருட்டிக் கொண்டு வெளிநாடு தப்பிச் சென்றுவிட்டார். இதைத் தொடர்ந்து ரூ. 100 கோடிக்கு மேல் நிதி மோசடி செய்யும் நபர்களின் சொத்துக்களை உடனடியாக பறிமுதல் செய்யும் சட்ட மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.
இதை தொடர்ந்து பட்டய கணக்கர்களை (ஆடிட்டர்ஸ்) ஒழுங்கு படுத்தும் வகையில் தனி அமைப்பை மத்திய அரசு உருவாக்க முடிவு செய்துள்ளது. இதற்கும் அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. நேஷனல் ஃபைனான்சியல் ரிப்போர்ட்டிங் அத்தாரிட்டி (என்ஃஎப்ஆர்ஏ) என்று அந்த அமைப்புக்கு பெயரிடப்பட்டுள்ளது.
பிஎன்பி மோசடிக்கு தணிக்கையில் ஏற்பட்ட மிகப்பெரிய பின்னடைவு தான் முக்கிய காரணமாக இருந்துள்ளது என்பது கண்டறியப்பட்டுள்ளது. இதை தொடர்ந்தே இந்த புதிய ஒழுங்குமுறை அமைப்பை மத்திய அரசு உருவாக்க முடிவு செய்துள்ளது.
இந்த புதிய அமைப்புக்கு ஆடிட்டர்கள் மற்றும் அவர்களது நிறுவனங்களை விசாரிக்கும் அதிகாரம் வழங்கப்படும். பட்டியலில் உள்ள மற்றும் இல்லாத நிறுவனங்களுக்கும் இது விஸ்தரிப்பு செய்யப்படும். இந்த அமைப்பில் ஒரு தலைவர், 3 உறுப்பினர்கள், ஒரு செயலாளர் இடம்பெறுவார்கள். இது தொடர்பான அறிவிப்பு 2 வாரங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து நிதி அமைச்சர் அருண்ஜெட்லி கூறுகையில், ‘‘பட்டய கணக்கர்களுக்காக என்ஃஎப்ஆர்ஏ தனி அதிகாரம் கொண்ட அமைப்பாக செயல்படும். நிறுவன சட்டத்தில் இது முக்கிய மாற்றமாக கொண்டு வரப்பட்டுள்ளது. வெளிநாடு மற்றும் உள்நாட்டு முதலீடுகளை அதிகரிக்க இந்த அமைப்பு உதவும்’’ என்றார்.
‘‘தற்போது இன்ஸ்டிடியூட் ஆஃப் சார்ட்டர்டு அக்கவுன்டன்ட்ஸ் ஆஃப் இந்தியா (ஐசிஏஐ) என்ற சுய அதிகாரம் கொண்ட அமைப்பு ஆடிட்டர்களுக்கு எதிரான நடவடிக்கையை எடுத்து வருகிறது. இதற்கு மாற்றாக புதிய அமைப்பு கொண்டு வரப்படவில்லை. வழக்கமான பணிகளை ஐசிஏஐ மேற்கொள்ளும். பெரிய அளவிலான பிரச்னைகளை என்ஃஎப்ஆர்ஏ மேற்கொள்ளும்’’ என்றார் ஜெட்லி. ஐசிஏஐ தற்போது கார்பரேட் விவகார அமைச்சக நிர்வாகத்தில் கீழ் செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.