டில்லி,

பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட்டில், தேர்தல் நடைபெறும் மாநிலங்களுக்கான புதிய அறிவிப்புகள் ஏதும் இருக்கக்கூடாது என மத்திய அரசுக்கு தேர்தல் கமிஷன் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

வடமாநிலங்களான, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் பிப்ரவரி – மார்ச் மாதங்களில் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி விவரம் கடந்த 4ந்தேதி தேர்தல் கமிஷன் வெளியிட்டது.

ஆனால், மத்திய அரசின் பட்ஜெட் பிப்ரவரி 1ந்தேதி தாக்கல் செய்யப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் காரணமாக தேர்தல் நடைபெறும் மாநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என எதிர்க்கட்சிகள் தேர்தல் கமிஷனில் முறையிட்டன.  சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது.

ஆனால், சுப்ரீம் கோர்ட்டோ,   பிப்ரவரி 1-ந்தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்வதை தடுக்க இயலாது என்று கூறிவிட்டனர். இந்த விவகாரத்தில் தலைமை தேர்தல் கமி‌ஷன் உரிய நடவடிக்கை எடுக்கலாம் என உச்சநீதி மன்றம் கூறியது.

இதைத்தொடர்ந்து மத்திய அரசு பிப்ரவரி 1 அன்று தாக்கல் செய்ய இருக்கும் பட்ஜெட் குறித்து  தேர்தல் கமி‌ஷன் நேற்று புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

அதில், “பிப்ரவரி 1-ந்தேதி தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட்டில், தேர்தல் நடைபெற உள்ள 5 மாநிலங்களுக்கு சலுகைகள் அளிக்கும் வகையில், அம்மாநிலங்களுக்கான புதிய திட்டங்கள் எதையும் அறிவிக்கக் கூடாது” என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து நிதி மந்திரி அருண்ஜெட்லி உரையாற்றும் போது, தேர்தல் நடக்கும் 5 மாநிலங்களில் மத்திய அரசு செய்துள்ள சாதனைகள் பற்றி குறிப்பிட்டு பேசக்கூடாது” என்றும் தேர்தல் கமி‌ஷன் உத்தரவிட்டுள்ளது.

மற்றபடி நாடு முழுமைக்குமான பொதுவான திட்டங்களை வெளியிடலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.