டெல்லி: நடப்பு நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட் ஜூலை 22 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் ஜூன் 24ந்தேதி தொடங்கி ஜூலை 3-ஆம் தேதி வரை நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்தொடரில் நாடு முழுவதும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினருகளுக்கு தற்காலிக சபாநாயகரால், பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்படும் எனவும், அதைத்தொடர்ந்து, ஜூன் 26ம் தேதி மக்களவை சபாநாயகர் தேர்தல் நடைபெறும் என்றும், வரும் 27ந்தேதி அன்று நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத்தலைவர் உரையாற்றுவார் என்றுந அறிவிக்கப்பட்டது. இந்த கூட்டத்தொடர் ஜூலை 3-ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ ஏற்கனவே அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், நடப்பு நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட் ஜூலை 22 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 18வது மக்களவையின் இரண்டாவது அமர்வு ஜூலை 22ந்தேதி தொடங்கி ஆகஸ்டு 9ந்தேதி வரை 15 அமர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளதாகவும், அப்போது பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மக்களவைத் தேர்தல் காரணமாக, கடந்த பிப்ரவரி மாதம் 1ந்தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், 3வது முறையாக மீண்டும் பாஜக தலைமையிலான ஆட்சி பதவி ஏற்ற நிலையில், நிதியமைச்சராக தொடரும் நிர்மலா சீத்தாராமன், தொடர்ந்து 7ஆவது முறையாக நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளார்.