டெல்லி: மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீத்தாராமன் 3வது முறையாக பொதுபட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். முதல்முறையாக டிஜிட்டல் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இன்றைய அவரது அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் வருமாறு,

மிகவும் இக்கட்டான சூழலில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது என்றவர்,  உலக பொருளாதாரத்தில் நிலையற்ற தன்மை நிலவிக் கொண்டிருக்கிறது என்றார். மேலும், இந்தியா உலக வர்த்தகத்தின் மையமாக திகழும் வகையில் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

முன்னெப்போதும் இல்லாத சூழலில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறேன் என்றவர், பொதுமுடக்கத்தால் இந்திய பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளாது. ஆனால், பொதுமுடக்கம் அறிவிக்காவிட்டால், பெரும் சேதங்களை சந்தித்திருக்கும் என்றார்.

நாட்டின் ஒட்டு மொத்த உற்பத்தியில் 13 சதவீதம் அளவிற்கு 3 ஆத்மநிர்பார் திட்டங்களில் உதவிகள் அறிவிக்கப்பட்டன. சுமார்  ரூ.27 லட்சம் கோடி அளவிற்கு ஆத்மநிர்பார் திட்டத்தின் கீழ் சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளதாகவும்,  ஆத்மநிர்பார் திட்டங்கள் மூலமாக கொரோனா காலத்தில் இந்திய பொருளாதாரம் வீழ்ந்துவிடாமல் பாதுகாக்கப்பட்டது எனறார்.

பிரதமரின் தானியம் வழங்கும் திட்டம் கொரோனா காலத்தில் ஏழை மக்களுக்கு பேருதவியாக இருந்தது. கொரோனா காலத்தில் ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பேருதவியாக இருந்தது என்றார்.

கொரோனா கட்டுப்படுத்தப்பட்டு இந்திய பொருளாதாரம் மீட்சி அடைந்து வளர்ச்சிப்பாதையில் பயணிக்க ஆரம்பித்துள்ளது.

இந்தியாவில் மேலும் இரண்டு கொரோனா தடுப்பூசிகள் இறுதிகட்ட சோதனையில் உள்ளன உலக நாடுகளால் நம்பிக்கைக்குரிய நாடாக இந்தியா பார்க்கப்படுகிறது என்றும் கூறினார்.

ஆஸி.யில் இந்திய கிரிக்கெட் அணி அடைந்த வெற்றி, நமது வலிமையை காட்டுகிறது