டெல்லி: மத்திய நிதி அமைச்சர் இன்று நாடாளுமன்றத்தில் வாசித்து வரும்  பொதுபட்ஜெட் 2021-22ல், 2 பொதுத்துறை வங்கிகள், எல்.ஐ.சி, மின்சாரம், துறைமுகங்கள் உள்பட பல பொதுத்துறை நிறுவனங்கள்  தனியார் மயமாக்கப்படும் என அறிவித்துள்ளார். இதற்கு  எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவையில் சில வினாடிகள் சலசலப்பு ஏற்பட்டது.

பொதுத்துறை வங்கிகள் தொடர்ந்து தனியார் மயமாக்கப்படும் நிலையில் தற்போது மேலும் இரண்டு பொதுத்துறை வங்கி தனியார் மயமாக்கப்படும் எனவும், எல்.ஐ.சி காப்பீடு நிறுவனத்தின் பங்குகளை பங்குச் சந்தைகள் மூலம் விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது  என்றும்  அரசு வசம் உள்ள பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யும் முடிவினை பட்ஜெட் உரையின் போது நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீடு 49 சதவீதத்திலிருந்து 74 சதவீதமாக உயர்த்தப்படுகிறது.

பொதுத்துறை வங்கிகளின் வாரக்கடன் ஒழுங்கு செய்யப்படும்.

பொதுத்துறை நிறுவன பங்கு விலக்கல் திட்டங்கள் விரைவாக நிறைவேற்றப்படும்.

பொதுத்துறை பங்கு விலக்கல் மூலம் 1.70 லட்சம் கோடி திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது

அரசு வங்கிகளுக்கு மத்திய பட்ஜெட்டில் கூடுதல் முதலீடாக 20,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

வங்கிகளுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டு முடக்கப்பட்டால் முதலீட்டாளர்கள் சிக்கலின்றி முதலீட்டு பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வங்கி டெபாசிட் இழப்பீடு 1 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும், மின்சாரம் தனியார் மயமாக்கப்படும் என்று கூறியவர், எந்த விநியோக நிறுவனத்திடம் இருந்து மின்சாரத்தை பெறலாம் என வாடிக்கையாளர்களே முடிவு செய்யலாம் என்றார்.

பல விமான நிலையங்களின் பராமரிப்பை தனியார் வசம் ஒப்படைக்கப்படும்.  கப்பல்களை மறுசுழற்சி செய்யும் ஆலைகளுக்கு பிரத்தியேக தளங்கள் உருவாக்கப்படும் என்றும் கூறினார்.

அதுபோல, துறைமுகங்களில் தனியார் பங்களிப்பு மேலும் அதிகரிக்கப்படும் என்று அறிவித்தபோது, எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பல எம்.பி.க்கள்   “அதானி, அதானி” என முழக்கமிட்டனர்.