மதுரை: நவராத்திரி விழாவையொட்டி, யூனியன் வங்கியில் பணியாற்றும் ஊழியர்கள் 9நாளும் 9வண்ணங்களில் உடை அணிய வேண்டுமென சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதற்கு, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எம்.பி. கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் நவராத்திரி விழாவும் ஒன்று. இந்த ஆண்டு நவராத்திரிவிழா அக்டோபர் 7ந்தேதி (வியாழக்கிழமை) தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழா விஜயதசமி வரை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. நவராத்திரி பண்டிகையின்போது, ஆலயங்களிலும் வீடுகளிலும் பூசைகளும் வழிபாடுகளும் நடைபெறும்.
இந்த நிலையில், பொதுத்துறை வங்கியான யூனியன் பாங்க் ஆப் இந்தியாவில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும், நவராத்திரி விழாவின் போது, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வண்ணத்தில் உடை அணிய வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், யூனியன் வங்கி பொது மேலாளர் நவராத்திரியின் ஒன்பது நாட்களும் ஒன்பது நிற உடைகளில் வர வேண்டுமென சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்? யார் இவருக்கு அதிகாரம் தந்தது! அடுத்தவரின் உரிமைகளில் தலையிடுகிற அத்து மீறல். உடனடியாக உத்தரவை திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.