புதுடெல்லி:

மற்ற மதத்தினரைவிட வேலை இல்லா திண்டாட்ட விகிதம் கிறிஸ்தவ மதத்திலேயே அதிகம் இருப்பதாக மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.


சச்சார் கமிட்டி அறிக்கைக்குப் பிறகு, சிறுபான்மையினர் வேலை இல்லா திண்டாட்டம் குறித்து சமீபத்திய விவரம் உள்ளதா என திரிணாமுல் காங்கிரஸ் எம்பி பிரசுன் பானர்ஜி கேள்வி எழுப்பியிருந்தார்.

மத்திய சிறுபான்மையின விவகாரத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி அளித்த எழுத்து மூலமான பதிலின் விவரம்:

கிராமப் புறங்களில் 6.9% மற்றும் நகர்ப்புறங்களில் 8.8% என்ற விகிதத்தில் கிறிஸ்தவர்கள் வேலையின்றி உள்ளனர்.

இது மற்ற மதத்தினரைவிட அதிகம்.
இந்த விவரம் 2017-18ம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட சர்வேயின் அடிப்படையிலானது.

நகர்ப்புறங்களில் சீக்கிய பெண்களும், கிராமப் புறங்களில் முஸ்லிம் பெண்களும் குறிப்பிட்ட சதவீதம் வேலை இன்றி உள்ளனர்.

கிராமப் புறங்களில் 5.7% இந்து ஆண்களும், 6.7% முஸ்லிம் ஆண்களும், சீக்கிய ஆண்கள் 6.4% பேரும் வேலை இன்றி உள்ளனர்.

நகர்ப்புறங்களில் 6.9% பேர் இந்து ஆண்களும், முஸ்லிம் ஆண்கள் 7.5% பேரும், சீக்கிய ஆண்கள் 7.2% பேரும் உள்ளனர்.

பெண்களைப் பொருத்தவரை, 16.7% சீக்கிய பெண்கள் நகர்ப்புறங்களில் அதிக அளவில் வேலை இன்றி உள்ளனர். கிராமப்புறங்களில் 8.8% பெண்கள் வேலை கிடைக்காமல் உள்ளனர்.

நகர்ப்புற பெண்களைப் பொருத்தவரை, இந்து பெண்கள் 10%, முஸ்லிம் பெண்கள் 14.5%, கிறிஸ்தவ பெண்கள் 15.6% பேர் வேலையின்றி உள்ளனர்.
கிராமப் புறங்களில், 3.5% இந்து பெண்களும், 5.7% முஸ்லிம் பெண்களும், அதே 5.7% சீக்கிய பெண்களும் வேலை கிடைக்காமல் உள்ளனர்.

இவ்வாறு அவர் எழுத்துமூலமான பதிலில் தெரிவித்துள்ளார்.