நாடு முழுவதும் வேலையில்லா இளைஞர்களின் கனவை போக்கும் வகையில் உதவி செய்ய அஞ்சலக துறையும் முன்வந்துள்ளது.
இது வேலையிலாதவர்களுக்கும், வேலை தேடிக்கொண்டே………. இருப்பவர்களுக்கும் ஆறுதலான விஷயம்.
பெரும்பாலான தனியார் வேலைநிறுவனங்கள் வேலை ஆசைக்காட்டி பணத்தை பறித்து வரும் வேளையில், இந்திய அஞ்சல் துறையினர், உங்கள் தகுதிக்கேற்ற வேலையை பெற ஆவன செய்கிறது.
நாட்டில் வேலைவாய்ப்பை பெருக்கும் நோக்கில் மத்திய தொழிலாளர் நலத்துறை இந்திய அஞ்சல் துறையுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளது. அந்த ஒப்பந்தத்தின் மூலம் வேலை தேடுபவர்கள் தலைமை தபால் நிலையங்களுக்குச் சென்று தங்கள் விவரங்களைப் பதிப்பித்துக் கொள்ளவும், அதன் வாயிலாக தனியார் நிறுவனங்களில் எளிதாக வேலைகிடைக்கும் வகையில் வழி வகை செய்யப்பட்டுள்ளது.. இதன் மூலம் தனியார் நிறுவனங்களில் வேலை, எளிதாகக் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தப்படி 52 பன்னாட்டு நிறுவனங்கள், தங்கள் நிறுவனத்திற்கு ஆட்கள் தேவைப்படுவதாக தபால் துறையின் இணையதளத்தில் பதிந்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அந்தந்த பகுதி தொழிற்நிறுவனங்களும் தபால் அலுவலங்களுடன் பதிவு செய்துள்ளது.
எனவே, வேலை வேண்டுவோர், தங்களது பெயர், பிறந்த தேதி, கல்வித்தகுதி, இமெயில் முகவரி, தொலைபேசி எண் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதாவது ஒரு அடையாளச் சான்றின் எண் போன்ற அடிப்படைத் தகவல்களை மட்டும் தலைமை தபால் அலுவலகத்தில் கொடுத்து பதிவு செய்ய வேண்டும்.
இந்தியாவில் உள்ள 811 தலைமை தபால் நிலையங்களிலும் இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதற்காக ரூ.15 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருவதாகவும் தபால்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த வேலைப்புக்கான தபால்துறை பதிவை, இணைய தளத்தில் தாங்களாகப் பதிவு செய்து கொள்ளமுடியாது. தபால் நிலையத்தின் மூலமாகவே பதிவு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.