நியூயார்க்: உலகை கதிகலக்கிவரும் கொரோனா வைரஸ் பரவல் குறித்து, முக்கியத்துவம் வாய்ந்த அமைப்பான ஐ.நா. பாதுகாப்பு சபையில், ஏப்ரல் 9ம் தேதி (நாளை) ஆலோசனை நடக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பாக கூறப்படுவதாவது; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில், கொரோனா பாதிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக, அனைத்து நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் உள்ளரங்கு கூட்டம் ஏப்ரல் 9ம் தேதி நடைபெறவுள்ளது. இதில், ‘வீடியோ கான்பரன்ஸிங்’ மூலமாகவும் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர்.
ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டரெசும் இதில் பங்கேற்கவுள்ளார். ஆலோசிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து, கூட்டத்தின் முடிவில் அறிக்கை வெளியிடப்படும். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தலைமை பொறுப்பு, ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு நாட்டின் பிரதிநிதிகளிடம் இருக்கும்.
இதன்படி, இந்த மாதத்திற்கான தலைமைப் பொறுப்பு கரீபியன் தீவு நாடான டொமினிகன் குடியரசு நாட்டின் பிரதிநிதி ஜோஸ் சிங்கரிடம் இருக்கும். கொரோனா குறித்த ஆலோசனை கூட்டத்துக்கு ஜோஸ் சிங்கரே தலைமை வகிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், இந்தக் கூட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து தீர்மானம் நிறைவேற்றப்படுவது குறித்த திட்டம் எதுவும் இல்லை என்றும் பிரச்னை குறித்து ஆலோசிக்கவே இந்தக் கூட்டம் என்றும் சிங்கர் தரப்பிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.