தற்போதைய பதட்டமான சூழ்நிலையில் அதிகபட்ச கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கவும், நிலைமை மேலும் மோசமடையாமல் பார்த்துக் கொள்ளவும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அரசாங்கங்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
“இரண்டு நாட்களுக்கு முன்பு, பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.” இந்த செயலை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம் என்று கூறிய குட்டெரெஸ் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது இரங்கலைத் தெரிவித்தார்.

“பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் எந்த சூழ்நிலையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை” என்று அவர் கூறியதாக குட்டெரெஸின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்தார்.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், குட்டெரெஸ் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அரசாங்கங்களைத் தொடர்பு கொண்டாரா என்று கேட்டதற்கு, “குட்டெரெஸ் எந்த நேரடித் தொடர்பையும் கொண்டிருக்கவில்லை” என்று அவர் கூறினார். “ஆனால் அவர்கள் நிலைமையை மிக உன்னிப்பாகவும் மிகுந்த கவலையுடனும் கண்காணித்து வருகின்றனர்” என்று டுஜாரிக் கூறினார்.
“இரு நாடுகளுக்கும் இடையிலான எந்தவொரு பிரச்சினையையும் அர்த்தமுள்ள, பரஸ்பர உரையாடல் மூலம் அமைதியான முறையில் தீர்ப்பதில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம்.” “பதட்டங்களை அதிகரிக்கக்கூடிய எந்த நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டாம் என்று இரு நாடுகளிடமும் நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம்,” என்று அவர் கூறினார்.