ஐநா சபையின் அமைதிக்கான சிறப்பு தூதராக நோபல் பரிசு பெற்ற மலாலா நியமிக்கப்பட்டுள்ளார்.
19 வயதேயான மலாலா பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர். பள்ளிக்கு சென்ற மலாலா பாகிஸ்தான் மத தீவிரவாதிகளால் கடந்த 2012ம் ஆண்டு சுடப்பட்டார். கிச்சைக்கு பிறகு உடல்நலம் தேறிய மலாலா பெண் கல்விக்கான போராட்டத்தில் குதித்தார்.
இதன் காரணமாக அவரது புகழ் உலகம் முழுவதும் பரவியது. அதைத்தொடர்ந்து, ஐ.நா.வின் அமைதிக்கான இளம் தூதராக நியமிப்பதாக பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து ஐ.நாவின் அமைதிக்கான தூதர் பதவியை மலாலா ஏற்றுக் கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது,
ஒரு குடும்பத்தில் பெண்கள் முன்னேற குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் பங்கும் அவசியம் தேவை என்றார். ஸ்வாட் பகுதியில் என்னைப் போல ஏராளமான சிறுமிகளும், பெண்களும் உள்ளனர். அவர்களும் சமூக அவலங்கள் குறித்து துணிச்சலாக பேச ஆர்வமுடன் உள்ளனர்.
ஆனால் அவர்களது பெற்றோர் அதற்கு அனுமதி தருவதில்லை. அவர்களது சகோதரர்களும் ஊக்கம் அளிப்பதில்லை என்று குற்றம்சாட்டினார்.
ஆனால், எனது குடும்பத்தினர் என்னை தடுக்கவில்லை. எனக்கு ஊக்கமே அளித்தனர். அதன் காரணமாகவே நான் இந்த நிலைக்கு உயர்ந்துள்ளேன். தற்போது பெண்களுக்கு தேவை சுதந்திரம். அதை முதலில் அவரது பெற்றோரும், சகோதரர்களும் கொடுக்க முன்வர வேண்டும் என்றார்.
பெண் கல்விக்கு ஆதரவாகப் பேசியதால் தலிபான் தீவிரவாதிகளின் தோட்டாக்கள் தம்மை துளைத்ததாக தெரிவித்த மலாலா, அந்த முயற்சியில் தீவிரவாதிகள் தோற்று தாம் மரணத்தில் இருந்து மீண்டு வந்தேன் என்றார்.
இனி வாழ்நாள் முழுவதும் பெண் கல்விக்காக தாம் பணியாற்றப் போவதாகவும் முஸ்லீம் மக்கள் உறுதியுடன் தீவிரவாதிகளுக்கு எதிராக ஒன்றிணைய வேண்டும் என்றும் மலாலா கோரியுள்ளார். தீவிரவாதிகள் செய்யும் எந்த ஒரு வன்முறை செயலையும் தாங்கள் ஏற்கவில்லை என்பதை முஸ்லீம் சமூகம் உறுதியுடன் தெரிவிக்க வேண்டும். தற்போது நான் வாழ்ந்துகொண்டிருப்பது இரண்டாவது வாழ்க்கை. பெண் கல்விதான் என் வாழ்வின் நோக்கம். அதற்காக நான் தொடர்ந்து பாடுபடுவேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
மலாலா ஏற்கனவே பாகிஸ்தானின் மிக உயர்ந்த பொதுமக்கள் விருதான ‘சிதாரே-எ-சுஜாத்’ எனும் தைரியமான பெண் என்ற விருதை பெற்றுள்ளார். மேலும் ஏராளமான அரசு மற்றும் சமூக சேவை நிறுவனங்களும் அமைதிக்கான விருதுகளை மலாலாவுக்குக் கொடுத்து பாராட்டி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.