சென்னை: பிரபல யுடியூபரான இர்பான், சட்டத்தை மீறி, மருத்துவமனையின் ஆபரேசன் தியேட்டருக்குள் சென்று, குழந்தையின் தொப்புள் கொடி கட் செய்தது தொடர்பான வீடியோ சர்ச்சையான நிலையில், அவர் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று விட்டதாக கூறப்படுகிறது. அதனால் அவர் சென்னை திரும்பியதும் விமான நிலையத்தில் காவல்துறையினர் கைது செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது,.
இந்த விவகாரத்தில் தனியார் மருத்துவமனைமீது நடவடிக்கை எடுத்துள்ள தமிழ்நாடு அரசு, இர்பான்மீது இதுவரை நடவடிக்கை எடுக்காதது குறித்து சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. சாதாரண சிறு பிரச்சினைக்கே இரவோடு இரவாக சென்று கைது செய்யும் தமிழ்நாடு காவல்துறை, இர்பானை ஏன் இன்னும் கைது செய்யவில்லை என கேள்வி எழுப்பப்பட்டு வந்தது.
இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இர்பான் வெளிநாட்டில் இருப்பதாக கூறியுள்ளார். அவர் வந்ததும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா. சுப்ரமணியன் கூறியுள்ளார்.
பிரபல யூடியூபர் இர்பான் மனைவிக்கு கடந்த ஜூலை மாதம் 24-ஆம் தேதி சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த போது மருத்துவமனை பிரசவ அறையில் இருந்த இர்பான் தனது குழந்தையின் தொப்புள் கொடியை கத்தரிக்கோல் கொண்டு வெட்டி உள்ளார். மருத்துவர் ஒருவர் கத்தரிக்கோல் கொடுக்க அவர் இதை செய்தார். இதை அனைத்தையும் அவர் வீடியோ பதிவு செய்து தனது யூடியூப் பக்கத்தில் கடந்த 19-ந் தேதி இர்பான் வெளியிட்டார்.
இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாது. ஏற்கனவே இதுபோல சட்டத்தை மீறி குழந்தையின் பாலினம் குறித்து அவர் வெளியிட்ட வீடியோவும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது மீண்டும் சட்டத்தை மீறி அவர் வெளியிட்ட வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இர்பானை உடனே கைது செய்ய வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன. அவரது செயல் தமிழ்நாடு மருத்துவ சட்டத்தின்படி தவறு என டாக்டர்கள் கண்டனம் தெரிவித்து இருந்தனர். மருத்துவத் துறை இதற்கு கண்டனம் தெரிவித்து வீடியோவை நீக்க எச்சரித்தது. அதன்படி, இந்த வீடியோவை இர்பான் தனது யூடியூப் பக்கத்தில் இருந்து நீக்கினார். அவர்மீது புகார்கள் பதியப்பட்டுஉள்ளது. அதனால் அவர் கைது செய்யப்படுவார் என கூறப்பட்டது.
ஆனால், சம்பவம் நடைபெற்று ஒரு வாரம் ஆன நிலையில், இர்பானுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளதாக மட்டுமே தகவல்கள் வெளியான நிலையில், அவரிடம் விசாரணை ஏதும் நடத்தப்படவில்லை. இதுஎதொடர்பாகவும் சமுக வலைதளங்களில் கேள்வி எழுப்பப்பட்டது. ஆளுங்கட்சிக்கு ஆதரவானவர் என்பதால், அவர்மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க தயங்குவதாக விமர்சனம் செய்யப்பட்டது.
இதுகுறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்த முறை மன்னிப்பு கேட்டாலும் விடமாட்டோம் என்று கூறினார்.
இந்த நிலையில், இன்று மீண்டும், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “யூடியூபர் இர்பான் மீது சட்ட ரீதியாகவும், துறை ரீதியாகவும் நடவடிக்கை தொடரும். இர்பான் தற்போது வெளிநாட்டில் உள்ளார். அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவர் வந்ததும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றவர், இர்பான் மற்றும் சம்பந்தப்பட்ட மருத்துவமனை மீது காவல் நிலையத்தில் வழக்கு உள்ளது. பிரசவம் நடைபெற்ற மருத்துவமனையின் சேவை 10 நாட்களுக்கு முடக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனைக்கு ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது என்றார்.