தெஹ்ரான்:
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இருந்து 170 பயணிகளுடன் உக்ரேன் புறப்பட்ட விமானம் விழுந்து விபத்துக்கு உள்ளாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதில் பயணம் செய்த பயணிகள் உயிர் பிழைத்ததிருக்க வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.
உக்ரைன் சர்வதேச விமானம் 752, 170 பேரை ஏற்றிக்கொண்டு, தெஹ்ரானுக்கு வெளியே விபத்துக்குள்ளானதில் உயிர் பிழைத்தவர்கள் குறித்து எந்த அறிகுறிகளும் இல்லை என்று ஈரானிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸைச் சேர்ந்த விமானம் தெஹ்ரானில் உள்ள ஈரானின் இமாம் கோமெய்னி விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. உக்ரேனிய தலைநகர் கெய்விற்கு செல்லும் வழியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
விமானம் விபத்துக்குள்ளான விமான நிலையத்திற்கு அருகிலுள்ள பகுதிக்கு மீட்பு குழுக்கள் அனுப்பப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. விமானம் தீப்பிடித்து எரிந்து விழுந்தாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், விமானத்தில் பயணம் செய்த பயணிகள் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்றும், தொழில்நுட்ப கோளாறுகாரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டு உள்ளதாகவும் விமான நிறுவனம் கூறி உள்ளது.
இதற்கிடையில், நேற்று இரவு ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதற்கும், இந்த விபத்துக்கும் தொடர்பு இருக்கலாம் என்பது குறித்தும் சமுக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.