டெல்லி: உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ள நிலையில், அங்கு சிக்கி உள்ள இந்தியர்களை மீட்கச் சென்ற இந்திய விமானம் நடுவானிலேயே பாதியில் திரும்பி வந்துள்ளது.
ரஷ்யா மற்றும் உக்ரைன் விவகாரம் உலக நாடுகளை பதற்றத்தில் ஆழ்த்தி உள்ளது. ஏற்கனவே கொரோனா தொற்றால் உலக பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ள நிலையில், தற்போது, உக்ரைன் மீதான ரஷியாவின் போர், 3வது உலகப்போராக மாற வாய்ப்பு உள்ளதாகவும் கருதப்படுகிறது. இதனால் உலக நாடுகள் மீண்டும் பொருளாதார இழப்பை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கப்பட்டு வருகிறது.
இந்த பரபரப்பான சூழலில், உக்ரைனில் வசிக்கும் மற்றும் பல்கலைக்கழகங்களில் படித்து வரும் இந்தியர்களை மீட்கும் பணியில் இந்திய வெளியுறவுத்துறை ஈடுபட்டு வருகிறது. சிறப்பு விமானங்களை அனுப்பி அங்குள்ள இந்தியர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் மீதமுள்ள இந்தியர்களை மீட்க ஏர் இந்தியா விமானம் நேற்று இரவு அங்கு சென்றது. ஆனால் அதை எச்சரிக்கை விடுத்து ரஷ்யா திருப்பி அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைனுக்குள் ரஷ்ய வீரர்கள் நுழைந்து போர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. உக்ரைன் விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களை கைப்பற்றுவதில் ரஷ்ய படைகள் தீவிரம் காட்டி வருகின்றன. முக்கியமாக, கீவ்வில் உள்ள சர்வதேச விமான நிலையத்தை கைப்பற்ற ரஷ்ய ராணுவம் ஈடுபட்டுள்ளன.
இதன் காரணமாக, உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்கச் சென்ற ஏர் இந்தியா விமானம் நடுவானில் பாதி வழியிலேயே இந்தியா திரும்பியுள்ளது.