ரஷ்யா மீதான தாக்குதலுக்கு, அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்த, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகம் உக்ரைனை அனுமதித்துள்ளது.

அமெரிக்காவின் இந்த முடிவு உக்ரைன்-ரஷ்யா மோதலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

ரஷ்யா தனது ராணுவ படைகளுக்கு துணையாக வட கொரிய தரைப்படைகளை நிலைநிறுத்தியதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்கா இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அமெரிக்காவின் இந்த அனுமதியை அடுத்து உக்ரைன் தனது முதல் நீண்ட தூர தாக்குதல்களை வரும் நாட்களில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் 306 கிமீ தூரம் வரை சென்று தாக்கக்கூடிய ATACMS ராக்கெட்டுகளைப் பயன்படுத்தி இந்த தாக்குதல் மேற்கொள்ளப்படலாம் என்று கூறப்படுகிறது.

ரஷ்ய இராணுவ இலக்குகளைத் தாக்க அமெரிக்க ஆயுதங்களைப் பயன்படுத்த அனுமதிக்குமாறு உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி பல மாதங்களாக கோரிக்கை வைத்த நிலையில் அடுத்த இரண்டு மாதத்தில் (ஜனவரி 20) டொனால்ட் டிரம்ப் அதிபராக பதவியேற்க இருக்கும் நிலையில் அதிபர் ஜோ பைடன் இந்த அனுமதியை வழங்கியிருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

உக்ரேனுக்கான அமெரிக்க நிதி மற்றும் இராணுவ உதவியின் அளவை நீண்ட காலமாக விமர்சித்து வரும் டிரம்ப், தான் பதவியேற்றதும் 24 மணி நேரத்தில் போரை விரைவில் முடிவுக்கு கொண்டுவருவதாக தேர்தல் பிரச்சாரத்தின் போது உறுதியளித்திருந்தார்.

டிரம்ப் பதவியேற்றதும் அதிபர் பைடனின் முடிவை மாற்றியமைப்பாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

இருப்பினும்,சில அமெரிக்க அதிகாரிகள் நீண்ட தூரத் தாக்குதல்களை அனுமதிப்பது போரின் ஒட்டுமொத்தப் பாதையை மாற்றும் என்று சந்தேகம் தெரிவித்தாலும், ரஷ்யப் படைகள் வெற்றி பெறும் தருணத்தில் இந்த முடிவு உக்ரைனுக்கு உதவக்கூடும் என்று கூறுகின்றனர்.

அமெரிக்காவின் இந்த முடிவு ரஷ்யாவின் வலிமையான ராணுவத்தை எதிர்த்து போராட உக்ரைனுக்கு உதவும் அதேவேளையில், ரஷ்யா உடன் சமாதான பேச்சுவார்த்தைகளை உறுதிசெய்யும் என்று கூறப்படுகிறது.

அதேவேளையில், வாஷிங்டனின் இந்த முடிவு “மூன்றாம் உலகப் போருக்கு” வழிவகுக்கும் என்று ரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினர்கள் எச்சரித்துள்ளனர்.