ண்டன்

பிரிட்டனில் கல்வி கற்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கு மீண்டும்  2 வருடப் பணி விசா வழங்கப்பட உள்ளது.

பிரிட்டனில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு அவர்கள் கல்வி முடிந்து  பட்டம் பெற்றதும் இரண்டு வருடப் பணி விசா வழங்கப்பட்டு வந்தது.   கடந்த 2012 ஆம் ஆண்டு பிரிட்டன் பிரதமராகப் பதவி ஏற்ற தெரசா மே அதை ரத்து செய்தார்.  அதன் பிறகு பிரிட்டனில் பயிலும்  சர்வதேச மாணவர்களுக்குப் பட்டம் பெற்றதும் 4 மாத பணி விசா வழங்கப்பட்டு வந்தது.

இதனால்  பிரிட்டனுக்குக் கல்வி பயில வரும் மாணவர்கள் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது.    அத்துடன் இங்குக் கல்வி பயிலும் பல திறமையான மாணவர்கள் பணி வாய்ப்பு கிடைக்காததால்  வேறு நாடுகளுக்குச் சென்று விடுவதாகவும் கூறப்பட்டுள்ளது.    ஆயினும் தெரசா மே தனது ஆட்சிக்காலத்தில் இந்த முடிவை மாற்றிக் கொள்ளவில்லை.  இந்த விதிமுறை தற்போது மாற்றப்பட்டுள்ளது.

தெரசா மேவை அடுத்து பதவிக்கு வந்த போரிஸ் ஜான்சன் இது குறித்து ஆய்வு செய்துள்ளார்.  அதன் அடிப்படையில் தற்போது பட்டதாரிகளுக்கு வழங்கப்பட்டு வந்த பணி விசா  நான்கு மாதங்களில் இருந்து ஆறு மாதங்களாக மாற்றப்பட்டுள்ளது.   அத்துடன் முனைவர் பட்டத்தைப் பெற்றவர்களுக்கு இந்த விசாக் காலம் ஒரு வருடம் ஆக்கப்பட்டுள்ளது.

அடுத்த வருடத்தில் இருந்து முன்பு போல அனைத்து வெளிநாட்டுப் பட்டதாரிகளுக்கும் இரண்டு வருடப் பணி விசா வழங்கப்பட உள்ளது.  அத்துடன் ஒரு துறையில் கல்வி பயின்ற மாணவர்கள் மற்ற துறைகளில் அவர்கள் திறமைக்கு ஏற்ப பணியில் சேரலாம்  எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.   இந்த அறிவிப்புக்குப் பிரிட்டனிலுள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் பெரும் வரவேற்பைத் தெரிவித்துள்ளன.