லண்டன்: பிரதமர் போரிஸ் ஜான்சன் ஏப்ரல் 26ந்தேதி இந்தியா வருகை தர இருந்த நிலையில், அவரது சுற்றுப்பயணம் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஏற்கனவே ஜனவரி 26ந்தேதி குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்பதாக அறிவித்திருந்த பிரதமர் போரிஸ் ஜான்சன், அதை ரத்து செய்திருந்த நிலையில், தற்போது மீண்டும் அவரது  இந்திய பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.  இந்தியாவில் கொரோனா 2வது அலை தீவிரமடைந்துள்ளதால், போரிஸ் ஜான்சனின் இந்திய பயணத்திட்டம் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்ள வருமாறு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு பிரதமர் மோடி கடந்த ஆண்டு அழைப்பு விடுத்திருந்தார். அதை ஏற்றுக்கொண்டபோரிஸ் ஜான்சன் ஜனவரி 26ந்தேதி நடைபெற்ற இந்திய குடியரசு தின  விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள சம்மதம் தெரிவித்திருந்தார்.

ஆனால், அந்த காலக்கட்டத்தில் பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்ததால், அங்கு மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால், அவரது வருகை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. பின்னர் ஏப்ரல் 26ந்தேதி இந்தியா வருகை தருவதாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி, 3 நாள் பயணமாக வரும்  26ம் தேதி இந்தியா வர திட்டமிட்டிருந்தார். இந்த நிலையில், இந்தியாவில் கொரோனா 2வது அலை தீவிரமடைந்துள்ளதால், அவரது வருகை கேள்விக்குறியானது.  இந்திய பயண நேரத்தை குறைத்துக்கொள்ள இருப்பதாக செய்திகள் வெளியாகின.,

இந்த நிலையில், தனது இந்திய பயணத்தை போரிஸ் ஜான்சன் ரத்து செய்துள்ளார். இதை இங்கிலாந்து  வெளிவிவகார அமைச்சகம் (எம்.இ.ஏ) ஒரு அறிக்கை மூலம் உறுதி செய்துள்ளது.

MEA இன் அறிக்கைபடி, இந்தியாவில் நிலவி வரும் கொரோனா  19 நிலைமையைக் கருத்தில் கொண்டு, ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் அடுத்த வாரம் இந்தியாவுக்கு வரமாட்டார் என்று பரஸ்பர ஒப்பந்தத்தின் மூலம் முடிவு செய்யப்பட்டுள்ளது. இரு தரப்பினரும் எதிர்வரும் நாட்களில் ஒரு மெய்நிகர் கூட்டத்தை நடத்தவுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே  ஏப்ரல் 18 ம் தேதி, பிரிட்டனின் எதிர்க்கட்சி தொழிலாளர் கட்சி, பிரதம மந்திரி ஜான்சன் தனது இந்திய பயணத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை விடுத்திருந்த நிலையில், போரிஸ் ஜான்சனின் இந்திய பயணம் மீண்டும்  ரத்து செய்யப்பட்டுள்ளது.