பாங்காக்: ஆணுறுப்பை பெரிதாக்குவதற்காக சிகிச்சை மேற்கொண்ட இங்கிலாந்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, தாய்லாந்து அதிகாரிகள் சம்பந்தப்பட்ட மருத்துவமனை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நைஜீரியாவில் பிறந்து இங்கிலாந்தில் வசித்து வந்த தொழிலதிபரும் சமூக வலைதள பிரபலமுமான இகோ உபிரிபோ (43), மார்ச் 6-ம் தேதி பாங்காக்கில் உள்ள தனியார் கிளினிக் ஒன்றில் ஆணுறுப்பை பெரிதாக்குவதற்கான சிகிச்சை மேற்கொண்டார்.
இதற்காக ஹைலூரோனிக் அமிலம் (Hyaluronic Acid) என்ற திரவப் பொருள் ஊசி மூலம் செலுத்தப்பட்ட சில மணி நேரங்களிலேயே அவர் உயிரிழந்தார். லண்டன் கரோனர் நீதிமன்றம் கடந்த மாதம் வெளியிட்ட அறிக்கையில், அவரது உயிரிழப்புக்கு இந்த ஊசியே காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிகிச்சைக்குப் பிறகு கிளினிக்கில் மசாஜ் செய்து கொண்டிருந்தபோது, உபிரிபோவுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. பின்னர் அவர் மயங்கி விழுந்தார். ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவருக்கு, நுரையீரலில் ரத்தக் கட்டி ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.
சி.டி. ஸ்கேன் எடுப்பதற்கு முன்பே அவர் சுயநினைவை இழந்தார். மருத்துவர்கள் 100 நிமிடங்களுக்கும் மேலாக அவரை காப்பாற்ற முயன்றும் பலனளிக்கவில்லை. அதிகாலை 1 மணியளவில் அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
பிரேதப் பரிசோதனை மற்றும் நச்சியல் பரிசோதனையில், ஹைலூரோனிக் அமில ஊசி செலுத்தப்பட்டதே மரணத்துக்குக் காரணம் என தெரியவந்ததாக கரோனர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தாய்லாந்து அரசு விசாரணை
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தாய்லாந்து சுகாதார அமைச்சகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. பாங்காக்கில் உபிரிபோவுக்கு சிகிச்சை அளித்த கிளினிக்கில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
அந்த கிளினிக்கிற்கு முறையான உரிமம் உள்ளதா, மருத்துவப் பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்பட்டனவா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. போலீசாரும் தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிளினிக் நிர்வாகிகள் அளித்த தகவலின்படி, உபிரிபோ 2024-ம் ஆண்டு முதல் அந்த கிளினிக்கில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதற்கு முன்பு நான்கு முறை ஆணுறுப்பை பெரிதாக்கும் ஊசி சிகிச்சையை அவர் எடுத்துள்ளார்.
மார்ச் 5-ம் தேதி ஐந்தாவது முறையாக சிகிச்சை பெற்றபோது, 40 மில்லி லிட்டர் அளவிலான திரவத்தை செலுத்தியுள்ளனர். இந்த சிகிச்சையை இரண்டு கட்டங்களாக மேற்கொள்ள மருத்துவர் பரிந்துரைத்ததாகவும், ஆனால் முழு அளவையும் ஒரே முறையில் செலுத்த வேண்டும் என உபிரிபோ கேட்டுக்கொண்டதாகவும் கிளினிக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மருத்துவ சுற்றுலாவுக்கு பின்னடைவு?
அழகியல் மருத்துவ சிகிச்சைகளுக்காக வெளிநாட்டினர் அதிகம் செல்லும் நாடுகளில் தாய்லாந்தும் ஒன்றாகும். இதுபோன்ற சிகிச்சைகளில் ஹைலூரோனிக் அமிலம் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக இது குறைந்த ஆபத்துள்ள, பெரிய அறுவைச் சிகிச்சை தேவையில்லாத சிகிச்சையாகக் கருதப்படுகிறது.
தாய்லாந்தில் மருத்துவ சுற்றுலா பல ஆண்டுகளாக பிரபலமாக உள்ளது. குறிப்பாக அழகியல் சிகிச்சைகளுக்கான சந்தையும் வேகமாக வளர்ந்து வருகிறது.
2024-ம் ஆண்டு நிலவரப்படி, தாய்லாந்தில் சுமார் 7,000 அழகியல் சிகிச்சை கிளினிக்குகள் இருந்ததாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதில் சுமார் 2,000 கிளினிக்குகள் பாங்காக்கில் உள்ளன.