லண்டன்:
சட்டவிரோதமாக தகவல் திருடிய வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ’கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா’ நிறுவனத்தை சோதனையிட லண்டன் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சமூகவலைதளங்களில் மிகப்பிரபலமான பேஸ்புக்கை, உலகம் முழுதும் 200 கோடிக்கு மேற்பட்டோர் பயன்படுத்துகின்றனர்.
இந்த நிலையில், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளில் செயல்படுகிற தேர்தல் தகவல்கள், தகவல்கள் பகுப்பாய்வு நிறுவனமான ‘கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா’, பேஸ்புக் பயனர்கள் 5 கோடிப் பேரின் தகவல்களை திருடி உள்ளது.
இந்த தகவல் திருட்டு, 2016–ம் ஆண்டு நவம்பர் 8–ந் தேதி நடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலையொட்டி நடந்தது. இது குறித்த தகவல் வெளியாகி உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் சட்டவிரோதமாக தகவல் திருடிய ’கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா’ வழக்கை விசாரித்து வந்த லண்டன் தகவல் ஆணையர் எலிசபெத் டென்ஹம், நிறுவனத்தின் அலுவலகத்தை முழு சோதனையிட லண்டன் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தார்.
இதற்கு ஒப்புதல் அளித்த லண்டன் நீதிமன்றம், தகவல் திருட்டு தொடர்பான முழு விபரத்தையும் மார்ச் 27 ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் சமர்பிக்குமாறும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த நிலையில் இங்கிலாந்தின் சேனல் 4 வெளியிட்ட தகவல் திருட்டு தொடர்பான செய்தியின் வாயிலாக, ’கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா’வின் தலைமை நிர்வாகி அலெக்ஸாண்டர் நிக்ஸ் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், இந்த நம்பிக்கை மோசடிக்காக ‘பேஸ்புக்’ சமூக வலைத்தள அதிபர் ஜூக்கர் பெர்க் மன்னிப்பும் கேட்டுக்கொண்டிருக்கிறார்.