திருச்சூர்:
லண்டனை சேர்ந்தவர் மரியம் காலித். இவரும் கேரளாவை சேர்ந்த குன்னும்ப்பத் நவுசாத் ஹூசைன் (வயது 28) என்பவரும் பேஸ் புக் மூலம் நட்பு ஏற்பட்டு காதலித்து, கடந்த 2013ம் ஆண்டு அக்டோபர் மாதம் லண்டனில் பதிவு திருமணம் செய்து கொண்டனர்.
2014ம் ஆண்டு அங்கிருந்து வெளியேறிய நவுசாத், தனது பெற்றோரிடம் பேசி சமாதானம் செய்து, அவரது மத வழக்கப்படி திருமணம் செய்து, மரியத்தை மருமகளாக ஏற்க வைப்பதாக உறுதி கூறிவிட்டு லண்டனில் இருந்து கேரளா திரும்பினார்.
ஆனால், காலப்போக்கில் மரியத்துடன் போனில் பேசுவது, மெசேஜ் செய்வது போன்றவற்றை நவுசாத் தவிர்த்தார். பேஸ்புக், வாட்ஸ் அப் ஆகியவற்றில் மரியத்தின் கணக்கை பிளாக் செய்தார். போன் மூலம் நவுசாத் பெற்றோரை தொடர்பு கொண்டபோது அவர்கள் திமிராக பேசியுள்ளனர்.
பின்னர் வக்கீல்கள், ஹெல்ப் லைன், பெண்கள் அமைப்புகள் உதவியுடன் நவுசாத் இருக்கும் இடத்தை மரியம் கண்டுபிடித்தார்.
இதையடுத்து கடந்த 2015ம் ஆண்டு அக்டோபர் மாதம் மரியா கேரளா வந்தார். இங்கு வந்து பார்த்த போது நவுசாத் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்திருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் திருச்சூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, நவுசாத்துடன் சேர்ந்து வாழ அனுமதி பெற்றார். ஆனால், அவரை நவுசாத் குடும்பத்தினர் வீட்டிற்குள் அனுமதிக்கவில்லை. இதனால் சவாக்கட்டில் உள்ள அந்த வீட்டின் முன் உட்கார்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
இது போல் மரியம் பல துன்பங்களை அனுபவித்தார். ஒரு முறை நவுசாத்தை நேரில் சந்தித்தபோது, தன்னை பெண் தோழியாக கூட ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று நவுசாத் கூறியதை கேட்டு மரியம் மன வேதனை அடைநத்தார். நிரந்தர விசா பெறுவதற்காக தான் மரியத்தை திருமணம் செய்து கொண்டதாக நவுசாத் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
பின்னர் நீதிமன்றத்துக்கு வெளியே சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, இருவரையும் பிரித்து மரியத்துக்கு ஜீவனாம்சம் வழங்க ஒப்புக் கொண்டனர். இதன் மூலம் நான் இனி நவுசாத்துக்காக காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. நான் எனது வாழ்க்கையை முடிவு செய்து கொள்வேன் என்று மரியம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மரியம் வக்கீல் சுதா கூறுகையில், நவுசாத்துடன் வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் தான் அவர் இங்கு வந்தார். ஜீவனாம்ச உடன்படிக்கையை அவர் விரும்பியதில்லை. நவுசாத் மறு திருமணம் செய்து கொண்டுவிட்டதால் வேறு வழியில்லாமல் போனது. உள்ளூர் அரசியல்வாதிகளின் அழுத்தம் காரணமாக ஜீவனாம்சி உடன்படிக்கைக்கு நவுசாத் குடும்பத்தினர் வந்தனர் என்றார்.
என்னை தீவிரவாதி என்று கூறி இந்தியாவுக்குள் வருவதை தடுத்தனர். ஆனால், நான் பல முறை இந்த வழக்குக்காக இந்தியா வந்தேன். இன்னும் ஒரு வாரத்தில் இந்தியாவில் இருந்து வெளியேறிவிடுவேன். அதன் பிறகு இங்கு வரமாட்டேன் என்று மரியம் தெரிவித்தார் என நியூஸ் மினிட் செய்தி வெளியிட்டுள்ளது..