2022 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பெய்ஜிங்-கில் நடைபெற இருக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியை புறக்கணிக்கப்போவதாக பிரிட்டன் மற்றும் கனடா ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன.

சீனாவில் நடைபெறும் மனித உரிமை மீறல்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் உள்ளிட்ட உயர்மட்ட பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் ஒலிம்பிக் போட்டி சம்பந்தப்பட்ட எந்த ஒரு நிகழ்ச்சியிலும் அமெரிக்கா சார்பில் யாரும் பங்கேற்கப் போவதில்லை என்று ஏற்கனவே அறிவித்தது.

அமெரிக்காவைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவும் இவ்வாறு அறிவித்த நிலையில், நேற்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனும் அரசு ரீதியான புறக்கணிப்பை அறிவித்தார்.

இதேபோல், கனடாவும் புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளதால், சீனாவில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

மனித உரிமை மீறல்கள் குறித்து குரல் கொடுத்த நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக தனது நாட்டு அதிகாரிகள் பங்கேற்க மாட்டார்கள் என்று நியூஸிலாந்து அறிவித்துள்ளது.

ஜப்பானும் இதே போன்ற ஒரு அறிவிப்பை வெளியிடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இருந்தபோதும் “இவர்கள் வரவில்லை என்பது குறித்து சீனா கவலைப்படவில்லை” என்று சீனாவின் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் வாங் வெங்பின் கூறினார்.