டெல்லி: கல்லூரி உதவிப பேராசிரியர் பணியிடங்களுக்கான ‘நெட்’ தேர்வு நவம்பர் 19-ம் தேதி முதல் நடைபெறும் என்று தேசியத் தேர்வுகள் முகமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பல்கலைக்கழக, கல்லூரிகளில் உதவிப்பேராரசிரியராக பணிபுரிவதற்கும், ஆராய்ச்சி உதவித்தொகை பெறுவதற்கும் UGC NET, CSIR NET தேர்வுகளும் தேசிய தேர்வு முகமையால் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.  கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கான தேசியத் தகுதித் தேர்வு (நெட்) ஆண்டுதோறும் ஜூன் மற்றும் டிசம்பர் மாத இறுதியில் நடக்கிறது. முதுநிலைப் பட்டப்படிப்பு இறுதியாண்டு படிப்பவர்களும் இந்த தேர்வு எழுதலாம். இதன் மூலம் மேற்கொண்டு JRF Junior Research Fellowship ஆராய்ச்சி உதவித்தொகை பெறமுடியும். மேலும், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் உதவிப்பேராசிரியராக பணியாற்ற முடியும்.

நடப்பாண்டில்,  தேசிய தேர்வு முகமை  நெட் (National Eligibility Test NET) தேர்வை  ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் அறிவித்தது. அதன்படி, NET தேர்வுக்கான ஹால்டிக்கெட் மே 15 ஆம் தேதி வெளியாகும். தேர்வுகள் ஜூன் 15 முதல் 20 ஆம் தேதி வரையில் நடைபெறும். தேர்வு முடிவுகள் ஜூலை 5 ஆம் தேதி வெளியாகும்  என அறிவிக்கப்பட்டது.. இதே போல், CSIR NET 2020 தேர்வு ஜூன் 21 ஆம் தேதி நடைபெறும் என்றும், தேர்வு முடிவுகள் ஜூலை 2 வது வாரத்தில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டது.
ஆனால், கொரோனா தொற்று பரவல் காரணமாக, மத்தியஅரசு அமல்படுத்திய  நாடு முழுவதுமான  ஊடரங்கு காரணமாக,  கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து வகை நிறுவனங்களும் மூடப்பட்டன. இதனால் தேர்வு தொடர்ந்து தள்ளி வைக்கப்பட்டு செப்டம்பர் 24-ம் தேதி முதல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது மீண்டும் தேர்வு தேதியை தேசிய தேர்வு முகமை தள்ளி வைப்பதாக அறிவித்து உள்ளது.
இந்நிலையில் நெட் தேர்வு மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தற்போது கல்லூரி உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான நெட் தேர்வு நவம்பர் 19-ம் தேதி முதல் நடைபெறும் என்று தேசியத் தேர்வுகள் முகமை (என்டிஏ) அறிவித்துள்ளது.
இது தொடர்பாக என்டிஏ வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”மத்தியக் கல்வி அமைச்சகத்தின் கருத்துருவை ஏற்று, தேர்வுகள் தள்ளி வைக்கப்படுகின்றன. பாடவாரியான அட்டவணை நேர அட்டவணை மற்றும் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் குறித்து விரைவில் வெளியிடப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் விவரங்களுக்கு: ugcnet.nta.nic.in இணையதளத்தை பார்த்துக்கொள்ளும்படி அறிவுறுத்தி உள்ளது.