சென்னை
தமிழக அரசின் சாதனைகளை ஊடகங்கல் மக்களுக்கு எடுத்துச் சொல்லவேண்டும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறி உள்ளார்.

நேற்று தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம்,
”அனைத்து துறைகளிலும், தமிழ்நாடு சிறந்த இடத்தை, முதல் இடத்தை நோக்கி சென்றுகொண்டு இருக்கிறதோ, அதேபோல விளையாட்டுத்துறையிலும் இந்திய ஒன்றியத்திலேயே முதலிடத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
விளையாட்டு வீரர்கள் நன்றாக படிக்கின்றார்கள் என்றால் அவர்களது வீட்டில் பெற்றோர்கள் அதிகமாக சந்தோசப்படுவார்கள். ஆனால், விளையாட்டிற்கு செல்லும்போது பெற்றோர்களுக்கு தயக்கம், பயம் இருக்கும். இவனுடைய எதிர்காலம் என்னவாகும், வேலை கிடைக்குமா என்று யோசிப்பார்கள். அதற்குதான் முதல்வர் 3 சதவீத விளையாட்டு இடஒதுக்கீடு முறையை செயல்படுத்துங்கள் என்று சொன்னார்கள். விளையாட்டை ஒரு லட்சியமாக எடுத்தாலும் வாழ்க்கையில் வெற்றிபெறலாம் என்ற நம்பிக்கையை விளையாட்டு வீரர்களுக்கு கொடுக்க வேண்டும் என்றுதான் இந்த வேலைவாய்ப்பு திட்டத்தை செயல்படுத்தினோம்.
இதற்கான அரசாணை 2019 ஆண்டு போடப்பட்டது என்றாலும், அவர்கள் வெறும் 3 பேருக்கு மட்டும்தான் வேலைவாய்ப்பு கொடுத்திருந்தார்கள். இதை சரியாக செயல்படுத்துங்கள் என்று முதல்வர் உத்தரவிட்டார். ஆகவே, சென்ற ஆண்டு சட்டப்பேரவையில் நான் பேசும்போது ஒரு வருடத்தில் 100 விளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பை கொடுப்போம் என்று சொல்லி, 104 விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலைவாய்ப்பை நாங்கள் கொடுத்திருக்கிறோம்.
சென்ற வருடம் மட்டும் 1,821 வீரர்களுக்கு உயரிய ஊக்கத்தொகையாக 60 கோடி ரூபாய் ஒரே வருடத்தில் வழங்கி இருக்கிறோம். எந்த ஆட்சியிலும் இந்த அளவிற்கு உயரிய ஊக்கத்தொகை வழங்கப்பட்டதில்லை. கடந்த நான்கு வருடங்களில் மட்டும் கிட்டத்தட்ட 4,650 விளையாட்டு வீரர்களுக்கு ரூ.150 கோடி உயரிய ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. சென்ற ஆட்சியில் 2011 முதல் 2021 வரை 10 வருடத்தில் ரூ.348 கோடி செலவில் விளையாட்டு உட்கட்டமைப்புகளை உருவாக்கியுள்ளார்கள்.
இந்த நான்கு வருடத்தில் மட்டும் திமுக அரசு ரூ.545 கோடி செலவில் விளையாட்டு உட்கட்டமைப்புகளை உருவாக்கியுள்ளோம். இது கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிகம்.யு.பி.எஸ்.சி. மெயின்ஸ் எழுதப்போன ஒவ்வொரு மாணவர்களுக்கும் தலா 25,000 ரூபாய் ஊக்கத்தொகை கொடுத்தோம். தற்போது இத்திட்டத்தின் கீழ் தங்கி பயில வசதி ஏற்படுத்தி கொடுத்தோம். இதனால், நான் முதல்வன் திட்டத்தின் போட்டி தேர்வு பிரிவு தொடங்கப்பட்ட முதல் ஆண்டிலேயே 47 மாணவர்கள் தேர்ச்சி பெற்றார்கள்.
இந்த ஆண்டு 50 மாணவர்கள் வெற்றி பெற்றார்கள். வரும் வருடங்களில் 100, 200 ஆகவேண்டும் என்பதுதான் முதல்வரின் எண்ணமாகும். திமுக அரசு அமைந்த முதல் ஆண்டில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.20,000 கோடி வங்கி கடன் இணைப்பாக வழங்கப்பட்டது. 2023ம் ஆண்டில் அதனை ரூ.30,000 கோடியாக உயர்த்தினோம். 2024ம் ஆண்டில் ரூ.35,000 கோடி மகளிர் குழுக்களுக்கு வங்கி கடன் இணைப்பு வழங்கப்பட்டது.
இந்த ஆண்டுக்கு ரூ.37,000 கோடி வங்கி கடன் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கட்டாயம் அந்த இலக்கை அடைவோம். மகளிர் சுய உதவிக்குழுக்கள், இளைஞர்கள், விளையாட்டு வீரர்கள், மாணவர்கள் என எல்லோருக்கும் எல்லாம் என்ற அனைவருக்குமான அரசாக திராவிட மாடல் அரசு முதல்வர் தலைமையில் செயல்பட்டு வருகின்றது. ஆகவே, ஊடகங்கள் இந்த சாதனைகளை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.”
எனத் தெரிவித்துள்ளார்.