சென்னை:
தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தந்தை மு.க.ஸ்டாலினுக்கு மகன் உதயநிதி அன்பு பரிசு ஒன்றை வழங்கி அவரை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றது. இதில், திமுக மட்டும் 125 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மை பெற்றது. இதனை தொடர்ந்து திமுக சட்டமன்ற கட்சி தலைவராக மு.க.ஸ்டாலின் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். திமுக சட்டமன்ற கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கான கடிதத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் வழங்கி ஆட்சியமைக்க உரிமை கோரினார்.
இதனை ஏற்றுக் கொண்ட ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தமிழக முதலமைச்சராக ஸ்டாலினை பதவியேற்க அழைப்பு விடுத்தார். இதன்படி, ஆளுநர் மாளிகையில் இன்று காலை 9 மணிக்கு எளிய முறையில் பதவியேற்பு விழா நடைபெற்றது. அப்போது ஸ்டாலினுக்கு ஆளுநர் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அவரை தொடர்ந்து 33 அமைச்சர்களும் பதவிப்பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில், தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அவரது மகன் உதயநிதி ஓவியம் ஒன்றை பரிசளித்துள்ளார். அந்த ஓவியமானது, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி உள்ளிட்ட மூவரும் சேர்ந்து தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலினை வாழ்த்துவது போல உள்ளது.
இதுதொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, திராவிட இயக்கத்தின் தொடர்ச்சியாக – தமிழக முதல்வராக நம்மை வழிநடத்தவுள்ள கழக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தந்தை பெரியார் – பேரறிஞர் அண்ணா – முத்தமிழறிஞர் இணைந்து, தலைவர் அவர்களை வாழ்த்துவது போன்ற ஓவியத்தை பரிசளித்தோம்.
இதனை வரைந்த ஓவியர் திரு.பிரேம் டாவின்சிக்கு அன்பும், நன்றியும் என்று அவர் பதிவிட்டுள்ளார்.