சென்னை: நாளை மறுநாள் காலை (14ம் தேதி ) 9:30 மணிக்கு அமைச்சராக பொறுப்பேற்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகனும், சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவுமான உதயிநிதி ஸ்டாலின். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சினிமா நடிகராகவும், தி.மு.க. இளைஞரணி செயலாளராக இருந்து வந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகன், கடந்த சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு அமோக வெற்றிபெற்றார். அதுபோல கட்சி தேர்தலிலும் இளைஞரணி தலைவர் பதவிக்கு போட்டியிட்டு 2-வது முறையாக கடந்த மாதம் நியமிக்கப்பட்டார்.
இதற்கிடையில், உதயநிதிக்கு அமைச்சர் பதவி வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உள்பட பலர் வலியுறுத்தி வந்தனர். இதனால், உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என தகவல்கள் வெளியாகின. ‘
இந்த நிலையில், உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்குவது உறுதியாகி உள்ளது. மேலும் 4 அமைச்சர்களின் இலாகாக்களும் மாற்றம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக கவர்னர் மாளிகையில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில், முதலமைச்சர் ஸ்டாலினின் பரிந்துரையை ஏற்று ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளதன் மூலம் உதயநிதி ஸ்டாலின் நாளை மறுதினம் அமைச்சராக பதவியேற்க உள்ளார். வரும் 14-ம் தேதி காலை 9.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெறும் என ஆளுநர் மாளிகை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
உதயநிதி ஸ்டாலினுக்காக கோட்டையில் தனி அறை ஒன்று தயாராகி வருவதாகவும், நாளை இரவுக்குள் பணிகளை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.