தூத்துக்குடி: மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தில், ஏரிகள், குளங்களை தூர்வாருவது குறித்து, திமுக எம்.பி. கனிமொழி, அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், கீதாஜீவன் ஆகியோர் ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுடன்  ஆலோசனை மேற்கொண்டனர்.

மழை வெள்ளப்பாதிப்பை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசனை மேற்கொள்ள வேண்டிய ஆட்சியாளர்கள், மழை வெள்ளத்தால் பல நூறு வீடுகள் நீரில் மூழ்கி பலரை பலிகொடுத்ததுடன், பல ஆயிரம் மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியான  நிலையில், தற்போது கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வது போன்று, பேரழிவுக்கு பிறகு,  ஏரிகள், குளங்களை தூர்வாருவது குறித்து ஆலோசனை மேற்கொண்டது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.

வரலாறு காணாத மழையால் தூத்துக்குடி மாவட்டமே சின்னாபின்னமாக சிதைந்துள்ளது. குறிப்பாக தூத்துக்குடி மாநகரம் மற்றும் தாமிரபரணி கரையோர பகுதிகள் பெரும் சேதத்தை சந்தித்துள்ளன. மாவட்டம் முழுவதும் பல்லாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. தற்போது மழை வெள்ளம் வடிய, வடிய பாதிப்புகளின் உக்கிரம் வெளியே தெரிய தொடங்கியிருக்கிறது. இதனிடையே, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தில் 42 பேரும், திருநெல்வேலி மாவட்டத்தில் 13 பேரும் என மொத்தம் 55 பேர் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. அதேவேளையில், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளதாக தமிழக அரசின் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் சமீபத்தில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் ஸ்ரீவைகுண்டம் பழைய பாலம், புதிய ஆற்றுப்பாலம் அருகே கரைகள் உடைந்து ஸ்ரீவைகுண்டம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்தது. பலர் வீடுகளில் சிக்கி தத்தளித்தனர். அதுபோல ஏரல் பாலம் உடைந்து, ஏரல் வெள்ளத்தில் மிதந்தது. தூத்துக்கு அருகே முக்கானி, ஆத்தூர், காயல் பகுதிகளில் வெள்ளநீர் புகுந்து அந்த பகுதியே முழுமையாக வெள்ளத்தில் மூழ்கியது. இதனால் தூத்துக்குடி, திருச்செந்தூர் போக்குவரத்து முடங்கியது. மேலும் திருச்செந்தூரும் வெள்ளத்தில் மூழ்கியது.  அதன் அருகே உள்ள பல கிராமங்கள் துண்டிக்கப்பட்டன.
இந்த மழை வெள்ளத்தால்  100-க்கும் மேற்பட்ட வீடுகள், வணிக நிறுவனங்கள், கடைகள் ஆகியவை இடிந்து மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. பல கிராமங்கள் கடந்த 10 நாட்களாக இருளில் மூழ்கி தவித்து வருகிறது. பல இடங்களில் நிவாரண பணிகள் நடைபெற்று வந்தாலும் பல கிராமங்கள் இன்னும் கண்டுகொள்ளாத நிலையே நீடிக்கிறது.

தூத்துக்குடி- பாளையங்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் அந்தோணியார்புரம் அருகே ஒரு பாலமே முழுமையாக அடித்துச் செல்லப்பட்டுள்ளது. வசவப்பபுரம் முதல் தூத்துக்குடி துறைமுகம் வரை சாலையில் பல இடங்களில் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த சேதங்களை சரிசெய்ய பல கோடி ரூபாய் ஆகும் என, தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலை, தூத்துக்குடி- எட்டயபுரம் சாலை, திருச்செந்தூர்- திருநெல்வேலி சாலைகள், தூத்துக்குடி மாநகரில் உள்ள பெரும்பாலான சாலைகள், பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் சாலைகளும் பெரிய அளவில் சேதமடைந்துள்ளன. தாமிரபரணி ஆற்றில் ஏரல், ஆத்தூர் பாலங்களில் சேதம் ஏற்பட்டுள்ளது. ஆற்றில் உள்ள குடிநீர் குழாய்கள், உறைகிணறுகள் ஒட்டுமொத்தமாக அடித்து செல்லப்பட்டுள்ளன. இதனால் மாவட்டம் முழுவதும் குடிநீர் விநியோகம் முடங்கியுள்ளது.

மாவட்டம் முழுவதும் ஏராளமான மின் கம்பங்கள், மின் மாற்றிகள் சேதமடைந்துள்ளன. மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அரசு மருத்துவமனை என, அரசு அலுவலகங்களுக்குள்ளும் தண்ணீர் புகுந்து பெருத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. வீடுகள், கட்டிடங்கள் இடிந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். நூற்றுக்கணக்கான ஏக்கரில் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக தாமிரபரணி பாசன பகுதிகளில் நெல் நாற்றங்கால்கள், நெல் பயிர் நடவு செய்த வயல்கள், உழவு செய்த வயல்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. வயல்களில் ஆற்று மணல் சேர்ந்துள்ளது. அதை அகற்றி வயல்களை சரி செய்ய விவசாயிகளுக்கு பெரும் செலவு ஏற்படும்.

இதேபோல் தொழில்நகரமான தூத்துக்குடியில் கடந்த 5 நாட்களாக அனைத்து தொழில்களுமே முழுமையாக முடங்கி கிடக்கின்றன. தூத்துக்குடி சிப்காட் வளாகம், கோரம்பள்ளம் தொழில் பேட்டை என, மாவட்டம் முழுவதும் உள்ள சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலைகளுக்குள் மழைநீர் புகுந்து, இயந்திரங்கள், உபகரணங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்த பொருட்கள், உற்பத்திக்கான மூலப்பொருட்கள் என, பல ஆயிரம் கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டிருப்பதாக தொழில் துறையினர் கூறுகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள 20 ஆயிரம் ஏக்கர் உப்பளங்களும் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. உப்பளங்களில் சேமித்து வைக்கப்பட்டிருந்த பல லட்சம் டன் உப்பு தண்ணீரில் அடித்து செல்லப்பட்டுள்ளது. இதேபோல் கோவில்பட்டி பகுதியில் தீப்பெட்டி உற்பத்தி அடியோடு முடங்கியுள்ளது. தூத்துக்குடி மாநகரம் மற்றும் தாமிரபரணி கரையோர பகுதி நகரங்களில் வணிக நிறுவனங்களுக்குள் தண்ணீர் புகுந்து, பொருட்கள் அனைத்தும் சேதமடைந்துள்ளன.

ஏரல் பகுதியில் அரிசி ஆலைகளுக்குள் தண்ணீர் புகுந்து டன் கணக்கில் அரிசி சேதமடைந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து தரப்பு மக்களின் வாழ்க்கையையும் மழை வெள்ளம் புரட்டி போட்டுள்ளது. இவைகளில் இருந்து மீள முடியாமல் மக்கள் தவிக்கின்றனர். கணக்கெடுப்பு பணிகளை அரசு விரைவாக செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரண உதவி களை விரைவாக செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தென்மாவட்டங்களில் மழை, வெள்ளத்தால் பயிர்கள் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்ற வலியுறுத்தல் குரலும் வலுத்துள்ளது.

பல பகுதிகளில் மழைத்தண்ணீர் வடிந்தும், கிராம மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு ஸ்ரீவைகுண்டம், ஏரல் பகுதிக்கு செல்லமுடியாமல் தவித்து வருகின்றனர். எனவே ஸ்ரீவைகுண்டம் முதல் ஏரல் வரை செல்லும் வடகால் வாய்கால் சாலைகளை உடனடியாக சீரமைக்கவேண்டும். மின்சாரம் இல்லாமல் இருக்கும் கிராமங்களுக்கு உடனடியாக மின் இணைப்பு கொடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
திருச்செந்தூர்-நெல்லை சாலையில் 9 நாட்களுக்கு பிறகு நேற்று முதல் நேரடி பஸ்போக்குவரத்து தொடங்கியது.   தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக் கால் திருச்செந்தூர்-நெல்லை சாலையில் பல இடங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. கருங்குளம்-புளியங்குளம், ஆழ்வார்திருநகரி, கேம்பலாபாத், மணத்தி பகுதிகளில் பல அடி உயரத்துக்கு சாலையை கடந்த வெள்ளநீர் பாய்ந்து ஓடிக் கொண்டிருந்தது. இதனால் கடந்த 17-ந் தேதி முதல் திருச்செந்தூர்-நெல்லை சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்ட நிலையில் சுமார் 9 நாட்களுக்கு பிறகு டிசம்பர் 25ந்தேதி முதல் பேருந்து போக்குவரத்து தொடங்கி உள்ளது.
முன்னதாக, தூத்துக்குடியில் மழை பெய்து நான்கு நாட்கள் ஆகியும் போல்டன்புரம் பகுதியில் எந்த மீட்புப் பணியும், நிவாரண உதவியும் வழங்க அதிகாரிகள், அரசியல்வாதிகள் வரவில்லை என ஆத்திரம் அடைந்த மக்கள், எந்த உதவியும் வேண்டாம் என புறக்கணித்தனர்.  தங்கள் பகுதிக்கு எந்த விதமான நிவாரணப் பொருட்களும் வரவில்லை, அரசு அதிகாரிகளோ அரசியல்வாதிகளும் வந்து ஆய்வு செய்யவும் இல்லை. மாநகராட்சி அலுவலகத்தில் மேயரிடம் கேட்டபோது, அவர் சரியான விளக்கம் அளிக்கவில்லை” எனவும், தொடர்ந்து தங்கள் பகுதி புறக்கணிக்கப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
அதுபோல தூத்துக்குடியில் 3 ஆயிரம் வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதையடுத்து மழை நீரை வெளியேற்ற வலியுறுத்தி 7 இடங்களில் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
ஆற்றில் இருந்து மணலை முற்றிலுமாக திருடி விற்றுவிட்டதாலும், ஆற்றிற்குள் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றாமல் ஆட்சியாளர்கள் மெத்தனம் காட்டியதால்தான் இந்த பெருவெள்ளம் ஏற்பட்டதாகவும்,  ஆற்றில் செல்ல வேண்டிய நீர், அதன் போக்கை மாற்றி, பல பகுதிகளில் கரையோரங்களை உடைத்துக்கொண்டு கிராமங்களுக்குள் புகுந்தன என்றுகுற்றம் சாட்டும் பொதுமக்கள், ஏரி குளங்கள், முறையாக தூர் வாரப்படாததும் மேலும் ஒரு காரணம் என்று தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஏரிகள் மற்றும் குளங்களை தூர் வாருவது பற்றி ஆலோசனை மேற்கொண்டதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ்  பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், , “அண்மையில் பெய்த அதிகனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் தூத்துக்குடி மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டது. அந்த மாவட்டத்தில், மீட்பு, நிவாரணம், சீரமைப்பு பணிகளை கழக அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், மழையால் ஏற்பட்ட பாதிப்புகளையடுத்து தற்போது உள்ள சூழல் மற்றும் அடுத்து மேற்கொள்ள வேண்டியப் பணிகள் குறித்து, மாண்புமிகு அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகளுடன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று ஆலோசனை மேற்கொண்டோம். இக்கூட்டத்தின் போது, வெள்ளப்பாதிப்பு தொடர்பான கணக்கெடுப்பை விரைந்து முடிக்கவும், வெள்ளத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள், பயிர்ச்சேதம், முழுமையாகவும், பகுதியாகவும் இடிந்த வீடுகள், உயிரிழந்த கால்நடைகள் ஆகியவற்றுக்கு உரிய நிவாரணம் வழங்குவது பற்றியும் ஆலோசனை செய்தோம்.

குறிப்பாக, மாவட்டத்தில் ஆய்வுப்பணிகளின் போது பொது மக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை தொகுத்து மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் கவனத்துக்கு கொண்டு செல்வது, மாவட்டத்தில் உள்ள ஏரிகள் மற்றும் குளங்களை தூர் வாருவது பற்றியும் கருத்துக்களை பரிமாறிக்கொண்டோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.