உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சியின் பிரச்சார பாடலில் உள்ள சில வார்த்தைகள் மத ரீதியாக உள்ளது என்று தேர்தல் ஆணையம் ஆட்சேபனை தெரிவித்துள்ளது.
இந்து என்ற வார்த்தையை நீக்குமாறு அக்கட்சிக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இதற்கு பதிலளித்துள்ள உத்தவ் தாக்கரே, தேர்தல் ஆணையம் நடுநிலையோடு அனைத்து கட்சிகள் மற்றும் தலைவர்களின் மத ரீதியிலான பேச்சுக்கள் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பிரச்சார பாடலில் திருத்தம் செய்யப்படும் என்று கூறி தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலை ஏற்க மறுத்துள்ளார்.
வன்முறையாளர்களை அவர்களின் உடையை வைத்து தெரிந்துகொள்ளலாம், முஸ்லீம்கள் ஊடுருவல்காரர்களுக்கு உதவுவார்கள் என்பது போன்று பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக-வினர் கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து பேசி வரும் நிலையில் தேர்தல் ஆணையம் அவர்கள் மீது எடுத்த நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
மாதிரி நடத்தை விதிகள் எந்த சட்ட அடிப்படையிலும் இல்லை என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். இது கட்சிகளின் ஒப்புதலுடன் தயாரிக்கப்பட்ட ஒரு குறியீடு, அதை செயல்படுத்த அவர்களின் ஒத்துழைப்பு அவசியம். ஆணையம் அனைவருக்கும் சமமான அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதை உறுதிப்படுத்த இந்த ஒத்துழைப்பு அவசியம்.
தேர்தல் கமிஷன் தொடர்ந்து சர்ச்சையின் மையமாக இருந்தால், தேர்தல் செயல்முறையில் நம்பகத்தன்மை இல்லாமல் போய்விடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
அபரிமிதமான பணத்தை வைத்துக்கொண்டு அனைத்து அரசு நிறுவனங்களிலும் பாஜக தனது ஆதிக்கத்தை செலுத்திவருவது ஜனநாயகத்துக்கு ஏற்றதல்ல என்று பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாக நடந்துகொள்வதாகக் கூறி உத்தவ் தாக்கரே பேசியிருப்பது தேர்தல் ஆணையத்தை சிக்கலில் சிக்க வைத்துள்ளது.