மும்பை
மகாராஷ்டிர மாநில தனியார் மருத்துவர்கள், சாதாரண நோய்களுக்கு சிகிச்சை அளிக்க தங்கள் சிகிச்சையகங்களை திறக்க வேண்டும் என முதல்வர் உத்தவ் தாக்கரே வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொரோனா அச்சத்தால் பலர் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் கடைகளை திறக்காமல் உள்ளனர். இதே வழியில் ஒரு சில தனியார் மருத்துவர்களும் தங்கள் சிகிச்சையகங்களை திறக்காமல் உள்ளனர். இதனால் மக்கள் ஜலதோஷம், இருமல் மற்றும் சாதாரண உடல்நலக் கோளாறுக்கும் அரசு மருத்துவமனையை நாட வேண்டிய நிலையில் உள்ளனர்.
இந்தியாவில் தற்போது கொரோனா வேகமாகப் பரவி வருவதால் அரசு மருத்துவமனைகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் கூட்டம் அதிகமாக உள்ளது. மேலும் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அனைவரும் கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்து வருவதால் சாதாரண உடல்நலக் கோளாறுகளுக்குச் சிகிச்சை அளிக்க அவர்களுக்கு போதுமான நேரம் கிடைப்பதில்லை.
இதையொட்டி மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே,”பல தனியார் மருத்துவர்கள் பாதுகாப்பு கருதி சிகிச்சையகங்களை திறக்காமல் உள்ளனர். பாதுகாப்பு முக்கியம் என்றாலும் சிகிச்சையகங்களை திறப்பது அவசியம் ஆகும். எனவே நான் தனியார் மருத்துவர்கள் தங்கள் சிகிச்சையகங்களை திறந்து சாதாரண உடல் நலக் கோளாறுகளுக்குச் சிகிச்சை அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
மக்களில் பலர் கொரோனா பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்குச் சென்று வந்துள்ளனர் என்ற போதிலும் அது குறித்து தகவல்கள் அளிப்பதில்லை. அவர்கள் தயங்காமல் தங்கள் பயண விவரங்களைத் தெரிவித்து சிகிச்சை பெறா வேண்டும். இது அவர்களுக்கு மட்டும் இன்றி உடன் இருப்பவர்களுக்கும் பயன்படும்” எனத் தெரிவித்துள்ளார்.