லண்டன்: கடன் மோசடி செய்துவிட்டு, தற்போது வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் விஜய் மல்லையாவின் யுனைடெட் ப்ரீவரீஸ் ஹோல்டிங்ஸ் லிமிடெட்(யுபிஎச்எல்) நிறுவனம், ரூ.14000 கோடி மதிப்புள்ள கடன் நிலுவையை செலுத்த முன்வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

நல்லெண்ண அடிப்படையில் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், மொத்தம் 14 வங்கிகளின் கூட்டமைப்பிடம் இத்தொகை செலுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. திவால் சட்டங்களின் நோக்கம், நிறுவனங்கள் செயல்படும் தன்மையுள்ளதாகவும், தங்களுடைய கடன்களை திரும்ப செலுத்தக்கூடியதாகவும் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்று யுபிஎச்எல் சார்பில் கூறப்பட்டுள்ளது.

கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் சார்பாக தரவேண்டிய கடன்களுக்காக, யுபிஎச்எல் நிறுவனத்தைப் பொறுப்பாக்க வேண்டுமென்ற கர்நாடக உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, உச்சநீதிமன்றம் சென்றது யுபிஎச்எல்.

யுபிஎச்எல், தற்போது செயல்படாத கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விளம்பரதாரராக இருந்தது. அதேசமயம், தற்போது விடுக்கப்பட்டுள்ளதைப் போன்ற ஒரு கடன் திரும்ப செலுத்துதல் உத்தரவாதம், கடந்த மார்ச் மாதம் கர்நாடக உயர்நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.