அபுதாபி: ஐக்கிய அரபு அமீரக நாட்டின் செவ்வாய் கிரகம் குறித்த ஆய்வுக்கு சாரா அல்-அமிரி என்ற ஒரு இளம்பெண் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த நியமனம் பலருக்கும் ஆச்சர்யத்தை அளித்துள்ளது.
அவர் தனது 12வது வயதில் இருக்கும்போதே, பூமிக்கு அருகிலுள்ள ஆண்ட்ரோமெடா கேலக்ஸியைப் பார்த்து அதன்பால் கவரப்பட்டார். விண்வெளித் துறையைப் பொறுத்தவரை, யுஏஇ தரப்பில் குறைந்த கவனமே செலுத்தப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சாரா, முதலில் ஒரு கணினி பொறியாளராகத்தான் தன் வாழ்க்கையைத் துவக்கினார். பின்னர், எமிரேட்ஸ் இன்ஸ்டிட்யூஷன் ஃபார் அட்வான்ஸ்டு சயின்ஸ் அன்ட் டெக்னாலஜி என்ற நிறுவனத்தில் விண்வெளி தொழில்நுட்பத் துறைக்கு மாறினார். அங்கே, அந்நாட்டின் முதல் செயற்கைகோள்கள் திட்டங்களில் பணியாற்றினார். அப்போதுதான் அவரின் கனவை நனவாக்கிக் கொண்டார்.
அதன்பிறகு, கடந்த 2016ம் ஆண்டில் எமிரேட்ஸ் அறிவியல் கவுன்சிலின் தலைவராக நியமிக்கப்பட்டார். இன்று, துணை புராஜெக்ட் மேலாளராக, செவ்வாய் கிரகம் குறித்த ஆய்வை இவர் வழிநடத்த நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
“இந்த மிஷன் ‘நம்பிக்கை’ என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில், செவ்வாய் கிரகம் குறித்த உலகளாவிய புரிதலுக்கு நாங்களும் பங்கேற்கிறோம். எங்கள் பிராந்தியத்தில் இருக்கும் கொந்தளிப்பான சூழலைக் கடந்து செல்லும் நாங்கள், விண்வெளி ஆராய்ச்சியில் ஆக்கப்பூர்வமான பங்காற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்” என்றுள்ளார்.