சென்னை: தமிழக சட்டப்பேரவையின் இன்றைய கேள்வி நேரத்தில், உ.வே. சாமிநாதர் பிறந்த நாளை  “தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி” நாளாக கொண்டாட வேண்டும் என அதிமுக எம்எல்ஏ கோரிக்கை விடுத்த நிலையில், அதை ஏற்று,  முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார்.

தமிழக சட்டப்பேரவையின் 2வது நாள் அமர்வு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றைய கேள்வி நேரத்தின்போது, உறுப்பினர்களின் பல்வேறு கேள்விகளுக்கு துறை சார்ந்த  அமைச்சர்கள் பதில் கூறினர். அப்போது,   அதிமுக உறுப்பினர் கே.பி. முனுசாமி; தமிழ் தாத்தா என்று அழைப்படும் உ.வே. சாமிநாதர் பிறந்த நாள் பிப். 19 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.   அவரது பிறந்த நாளை தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாக கொண்டாடப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இதற்கு பதில் அளித்த முதலமைச்சர் ஸ்டாலின்,  டாக்டர் உ.வே.சாமிநாதர் பிறந்தநாளை தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாக கொண்டாட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்கள். அவர்களுடைய கோரிக்கையை ஏற்று நிச்சயமாக வரக்கூடிய காலக்கட்டங்களில் “தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி” நாளாக கொண்டாடப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என அறிவித்தார்.