வாஷிங்டன்:
ஈரான் மீது தாக்குதல் நடத்த அதிபர் டிரப்ம் எடுத்துள்ள முடிவை தடுக்கும் நோக்கில், அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் வாக்கெடுப்பு நடத்த சபாநாயகர் நான்சி பெலோசி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஈரான் ஜெனரால் காசிம் சுலைமானி, அமெரிக்க படையால் சுட்டுக்கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதற்கிடையில் செய்தியார்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், உலக அமைதியை கருத்தில் கொண்டு ஈரான் மீது எந்தவித ராணுவத் தாக்குதலையும் நடத்த விரும்பவில்லை என்றும், ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் யாரும் பாதிக்கப்பட வில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இநத பரபரப்பான சூழ்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால் டிரம்பின் செயல்கள் போர் பதற்றத்தை அதிகரித்து வருவதாகவும், ஈரான் போர் தொடுப்பதை தவிர்க்கும் நோக்கில், எதிர்க்கட்சிகள் அதிகம் உள்ள அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் வாக்கெடுப்பு நடத்த முடிவு செய்துள்ளதாக சபாநாயகர் நான்சி பெலோசி தெரிவித்துள்ளார்.
1973 போர் அதிகாரங்கள் சட்டத்தின் கீழ், நிர்வாகம் முக்கிய இராணுவ நடவடிக்கைகள் குறித்து பிரதிநிதிகள் சபைக்கு அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ள நான்சி பெலோசி, ஈரானுடன் போரிடுவதைத் தடுக்கவும், அவர் ஒரு உயர் ஜெனரலைக் கொல்ல உத்தரவிட்டதை எதிர்த்தும், இன்று (வியாழக்கிழமை) ஜனநாயகக் கட்சி தலைமையிலான அமெரிக்க பிரதிநிதிகள் சபை வாக்கெடுப்பபு நடத்தும் என்று கூறினார்.
இதுகுறித்து விவரமான அறிக்கை வெளியிட்டுள்ள சபாநாயகர் நான்சி, “அமெரிக்க மக்களை பாதுகாப்பாக வைத்திருக்கவும், பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தவும் ஒரு ஒத்திசைவான மூலோபாயம் தன்னிடம் இல்லை என்பதை ஜனாதிபதி டிரம்ப் தெளிவுபடுத்தியுள்ளார்” என்று குற்றம் சாட்டியுள்ளவர், 1973 போர் அதிகாரச் சட்டத்தின் கீழ், நிர்வாகம் முக்கிய இராணுவ நடவடிக்கை கள் குறித்து காங்கிரசுக்கு அறிவிக்க வேண்டும், ஆனால் டிரம்ப் வழக்கத்திற்கு மாறாக, ஈராக்கில் இருந்து, சக்திவாய்ந்த ஈரானிய ஜெனரல் காசி சோலைமானியைக் கொன்றது சரி என்று தனது தரப்பு நியாயத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
அதிபர் டிரம்பின் செயல்கள் போர் பதற்றத்தை அதிகரித்துள்ளதாகவும், ஈரானுக்கு எதிரான டிரம்பின் ராணுவ நடவடிக்கைகளை கட்டுப்படுத்த பிரதிநிதிகள் வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளதாகவும், மேலும் உடனடியாக வன்முறையைத் தடுக்கும் விதமாக பயனுள்ள நடவடிக்கைகளை முன்னெடுக்க நிர்வாகம் காங்கிரஸுடன் இணைந்து செயல்பட வேண்டும் எனவும் நான்சி வலியுறுத்தி உள்ளார்.
அதே வேளையில் அமெரிக்க செனட் சபையில் அதிபரின் குடியரசு கட்சி பெரும்பான்மையாக உள்ளதால், பிரதிநிதிகள் சபையின் தீர்மானம் நிறைவேற்றப்பட வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.