திருச்சி: டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருச்சியில் இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி 60 நாட்களுக்கும் மேலாக தலைநகர் டெல்லியில் பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலத்தை சேர்ந்த விவசாயிகள் போராடி வருகின்றனர். குடியரசு தினமான இன்று அவர்கள் டெல்லியில் டிராக்டா் பேரணியில் ஈடுபட்டனர். அந்த போராட்டம் வன்முறையில் முடிந்தது.
டெல்லி விவசாயிகளின் டிராக்டர் அணிவகுப்புக்கு ஆதரவாக தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு, மத்திய தொழிற் சங்கங்கள் சார்பாக டிராக்டா் மற்றும் இரு சக்கர வாகன பேரணி நடைபெறுவதாக அறிவித்தது. அதன்படி இன்று திருச்சி மாவட்டத்தில் திருச்சி மாநகா், திருவறும்பூா், அந்தநல்லூா், மணிகண்டம் ஒன்றிய விவசாய சங்கங்கள் மற்றும் திருச்சி மாவட்ட மத்திய தொழிற் சங்கங்கள் சார்பாக நடைபெற்றது.
போலீசார் டிராக்டர் கொண்டுவர அனுமதி மறுக்கவே இருசக்கர வாகனத்தில் குவிந்தனர். இதில் திருச்சி மாநகரில் நீதிமன்றம் அருகே உள்ள எம்.ஜி.ஆா் சிலை அருகில் இருந்து தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் நிர்வாகி ஜோசப் வில்சன், சிஐடியு சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ரங்கராஜன், ஏஐடியுசி மாவட்ட செயலாளர் சுரேஷ், ஐஎன்டியூசி மாவட்ட நிர்வாகி வெங்கடநாராயணன், ஹிந்து மஸ்தூர் சங்கத்தின் நிர்வாகி ஜான்சன், ஏஐசிசிடியூ நிர்வாகி மகேந்திரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பாண்டியன், அகில இந்திய விவசாய ஒருங்கிணைப்புக் குழு நிர்வாகிகள் சிவசூரியன் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் பேரணியாக புறப்பட்டனர்.
போலீசார் அனுமதி மறுத்து தடுத்து நிறுத்தியதால் அவர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து பேரணியானது புறப்பட்டு சென்றது. மாநகராட்சி அலுவலகம், ஒத்தகடை, தலைமை தபால் நிலையம், வழியாக ரயில் நிலையம் அருகில் முடிந்தது. பேரணியில் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.