வேலூர் :  ”மலைவாழ் மக்களுக்காக  விரைவில் இருசக்கர ஆம்புலன்ஸ் திட்டம்  கொண்டு வரப்பட உள்ளது.  இந்த திட்டம் அடுத்த மாதம் (நவம்பர்) 8ந்தேதி தொடங்கி வைக்கப்பட உள்ளது  என தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,  “தமிழகத்தில் உள்ள மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளில் மருத்துவ வசதிக்காக ஆம்புலன்ஸ் சென்றுவர மிகவும் சிரமமாக இருப்பதால் மலைவாழ் பகுதிகளுக்கு இரண்டு சக்கர ஆம்புலன்ஸ் திட்டம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய திட்டம்  வருகின்ற நவம்பர் மாதம்  8ம் தேதி முதல் தொடங்கி வைக்கப்படுகிறது. அதன்படி,  நவம்பர் 8ம் தேதி ஜவ்வாது மலையில் இருந்து தொடங்கி வைக்கப்பட உள்ளது என்றார்.

பின்னர் இந்த திட்டம் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, தமிழகம் முழுவதும் 25 இடங்களில் இரண்டு சக்கர ஆம்புலன்ஸ் வசதி செய்யப்படும் என்றும் கூறினார்.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களில் மட்டும் 1,021 மருத்துவர்களும், 977 நர்ஸ்களும், 946 மருந்தாளர்களும், 526 உதவியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். படிப்படியாக காலிப் பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்படும் என்றும் உறுதி அளித்தார்.

முன்னதாக தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில், மலைவாழ் மக்களின் வசதிக்காக   இரண்டு சக்கர ஆம்புலன்ஸ் வசதி செய்து தரப்ப்படும் என கூறியிருந்த நிலையில், அந்த திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர அரசு நடவடிக்கை  மேற்கொண்டுள்ளது.