கேதார்நாத் :

குளிர்காலம் தொடங்கி விட்டதால் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புண்ணிய ஸ்தலமான கேதார்நாத் ஆலயம் நேற்றுடன் மூடப்பட்டுள்ளது.

இது தொடர்பான நிறைவு விழாவில் கலந்து கொள்ள உத்தரபிரதேச முதல்-அமைச்சர் யோகி ஆதித்ய நாத்தும், உத்தரகாண்ட் முதல்-அமைச்சர் திரிவேந்திர சிங் ராவத்தும் ஞாயிற்றுக்கிழமை கேதார்நாத் சென்றிருந்தனர்.

நேற்று காலை 8.30 மணிக்கு நடைபெற இருந்த நிறைவு விழா நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு, இருவரும் பத்ரிநாத் செல்வதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆனால் கேதார்நாத்தில் நேற்று காலையில் இருந்து இடை விடாது மழை கொட்டியதுடன், கடும் பனிப்பொழிவும் இருந்தது.

இதனால் இரண்டு முதல் -அமைச்சர்களும் தாங்கள் தங்கி இருந்த விருந்தினர் மாளிகையை விட்டு வெளியே வர இயலவில்லை. சுமார் எட்டு மணி நேரம் ஆதித்யநாத்தும், ராவத்தும் கேதார்நாத்தில் முடங்க நேரிட்டது.

மாலை 4.30 மணி வாக்கில் பனிப்பொழிவு குறைந்த பின் இரு முதல்-அமைச்சர்களும் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள சாச்சர் பகுதிக்கு, ஹெலிகாப்டரில் புறப்பட்டு சென்றுள்ளனர். இரவில் அங்கு தங்கிய இருவரும், பின்னர் பத்ரிநாத் கோயிலுக்கு செல்ல உள்ளனர்.

– பா. பாரதி