அலகாபாத்: பல ஆண்டு அயோத்தி பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, மசூதி கட்ட தனியாக இடம் ஒதுக்கப்பட்ட நிலையில், அந்த நிலம் தங்களுக்கு சொந்தமானது என அலகாபாத் நீதிமன்றத்தில் சகோதரிகள் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அயோத்தியில் உள்ள ராமஜென்ம பூமி விவகாரம் பல ஆண்டுகளுக்கு பிறகு தீர்வு காணப்பட்டது. கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் 7-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு, ராமஜென்ம பூமி இடம் இந்துக்களுக்கு சொந்தமானது என வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கியது. அத்துடன், இஸ்லாமியர்கள் மசூதி கட்ட வேறு ஒரு இடத்தை ஒதுக்கவும் உத்தரவிட்டது.
அதைத்தொடர்ந்து, உ.பி. மாநிலம், தன்னிபூர் கிராமத்தில் 5 ஏக்கர் நிலத்தை உத்தரபிரதேச அரசு மசூதி கட்ட உத்தரபிரதேச சன்னி வக்பு வாரியத்துக்கு ஒதுக்கிக் உத்தரவிட்டது. அதன்படி, அங்கு மசூதி கட்டுவதற்கான ஆயத்தப்பணிகள் தொடங்கி உள்ளன.
இந்த நிலையில், அந்த 5 ஏக்கர் நிலம் தங்களுக்கு சொந்தமானது என்று டெல்லியை சேர்ந்த ராணி கபூர், ராமராணி என்ற இரு பஞ்சாபி 2 சகோதரிகள் உரிமை கோரியுள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ கிளையில் ‘ரிட்’ மனு தாக்கல் செய்துள்ளனர். மனுவில், தங்களது தந்தை கியான் சந்திர பஞ்சாபி, 1947 ம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின்போது, பாகிஸ்தனில் உள்ள பஞ்சாபிலிருந்து, இந்தியாவுக்கு வந்து பைசாபாத் (இப்போது அயோத்தி) மாவட்டத்தில் குடியேறியதாக தெரிவித்துள்ளனர். அவருக்கு தன்னிபூர் கிராமத்தில் 28 ஏக்கர் நிலத்தை 5 ஆண்டு காலத்துக்கு அரசு துறை ஒதுக்கிக் கொடுத்தது.
பின்னர், அதை அதிகாரிகள் நீக்கியதும், இது குறித்து மீண்டும் அயோத்தி கூடுதல் ஆணையரிடம் என் தந்தை மேல்முறையீடு செய்து, பெயர் சேர்க்கப்பட்டது. ஆனால், பின்னர்,நடந்த ஆய்வுப்பணியின்போது, என் தந்தை பெயர் மீண்டும் நீக்கப்பட்டது.
அதிகாரியின் உத்தரவுக்கு எதிராக, சதர், அயோத்தியாவின் ஒருங்கிணைப்பு அலுவலர் முன் முறையீடு செய்யப்பட்டது, ஆனால் அந்த மனுவை பரிசீலிக்காமல், அதிகாரிகள் தங்கள் 28 ஏக்கர் நிலத்தில் ஐந்து ஏக்கர் நிலத்தை வக்ஃப் வாரியத்திற்கு நிர்மாணிக்க ஒதுக்கீடு செய்துள்ளனர்.
இந்த விவகாரத்தில், தீர்வுகள் பிரிவு அதிகாரி தீர்வு காணும்வரை, அந்த நிலத்தை சன்னி வக்பு வாரியத்துக்கு மாற்ற தடை விதிக்க வேண்டும் என கோரியுள்ளனர்.
இந்த மனுமீதான விசாரணை வரும் 8ந்தேதி நடைபெற உள்ளது.