சென்னை: தூத்துக்குடியில் இரண்டு கப்பல்கட்டும் தளம் அமைய இருப்பதாக தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின் இதன்மூலம் 55 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், ”சங்கப்பாடல்கள் சொல்லும் கப்பற்கலையில் தமிழரின் பெருமைமிகு வரலாற்றை! இப்போது, தூத்துக்குடியில் 30 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில், 55 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெறும் வகையில் இரு கப்பல் கட்டும் தளங்கள் அமையவுள்ளன. தென் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குப் புதியதொரு அடித்தளமாக இவை அமையும்!” என்று குறிப்பிட்டுள்ளார். தூத்துக்குடியில் இரு கப்பல் கட்டும் தளங்கள் தமிழகத்தில் தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளங்களை நிறுவுவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாகி உள்ளன. இதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் சிப்காட் நிர்வாகமும் மற்றும் வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழகமும் சில வாரங்களுக்கு முன்பு கையொப்பமிட்டன. இதன் மூலம் ரூ.30,000 கோடி முதலீடு செய்யப்பட்டு 55,000 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட உள்ளதாக, தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், “கொச்சி ஷிப்யார்ட் நிறுவனம், உலக அளவிலான வணிகக் கப்பல் கட்டும் தளத்தை நிறுவ ரூ.15,000 கோடியை முதலீடு செய்யும். முதல்கட்டமாக 10,000-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் (4,000 நேரடி மற்றும் 6,000 மறைமுக) உருவாக்கப்படும். மசகான் டாக் ஷிப் பில்டர்ஸ் நிறுவனமானது, ரூ.15,000 கோடி முதலீட்டில் மற்றொரு உலகளாவிய வணிகக் கப்பல் கட்டும் தளத்தை அமைக்கிறது. இது 45,000-க்கும் மேற்பட்டோருக்கு (5,000 நேரடி மற்றும் 40,000 மறைமுக) வேலைவாய்ப்பை உருவாக்கும். இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், இந்தியாவின் கடல்சார் உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப திறன்களை மேம்படுத்துவதில் ஒரு முக்கிய நகர்வாக இருக்கும். இந்த இரண்டு மிகப்பெரிய திட்டங்களும் சேர்ந்து, கப்பல் கட்டுதல் மற்றும் கடல்சார் கண்டுபிடிப்புகளுக்கான உலகளாவிய மையமாக தமிழகம் உருவெடுக்க வழிவகுக்கும்” என்று டி.ஆர்.பி. ராஜா தெரிவித்தார்.

முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசிய தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, திமுக ஆட்சியில் தொழில்துறை வரலாறு காணாத வளர்ச்சிகண்டுள்ளது. பல தொழில்பிரிவுகள், குறிப்பாக எலெக்ட்ரானிக்ஸ், வாகன உதிரிபாகங்கள், காலணி தயாரிப்பு போன்ற தொழில் பிரிவுகளில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
முதல்வரை பொறுத்தவரை, பாரம்பரிய துறைகள் மற்றும் புதிய துறைகளில் நாம் கால்பதிக்க வேண்டும், வளர்ச்சி காண வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். இதற்கிணங்க வெளிநாட்டு பயணங்கள், இங்கு நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாடுகளில் செமிகண்டக்டர் போன்ற புதிய தொழில் பிரிவுகள் மற்றும் கப்பல் கட்டும் துறையில் அதி முக்கியத்துவம் இருப்பதை அறிந்துள்ளோம். நாம் கப்பல் கட்டும் துறையில் நீண்ட காலமாக உள்ளோம்.
இதன் வாயிலாக, தற்போது தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனம் மற்றும் சிஎஸ்எல் எனப்படும் கொச்சின் ஷிப்யார்டு லிட் நிறுவனம் இடையில் ரூ.15 ஆயிரம் கோடிக்கான முதலீட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அதேபோல், மசகான் டாக் ஷிப் பில்டர்ஸ் நிறுவனத்துடனும் ரூ.15 ஆயிரம் கோடிக்கான ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் அமையும் இந்த கப்பல் கட்டும் தளங்களில் சிஎஸ்எல் நிறுவனத்தில் 4 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும், 6 ஆயிரம் பேருக்கு மறைமுகமாகவும் என 10 ஆயிரம் பேருக்கும், மசகான் நிறுவனத்தில் 5 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும், 40 ஆயிரம் பேருக்கு மறைமுகமாகவும் என 45 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும்.
இதுதவிர, பல்வேறு முக்கியமான சர்வதேச நிறுவனங்களின் அதிகாரிகள் விரைவில் தமிழகம் வர உள்ளனர். அப்போது கூடுதல் தகவல்கள் வெளியாகும். இந்த இரு முதலீட்டு திட்டங்களும் தூத்துக்குடி துறைமுகத்தை ஒட்டியே அமைய உள்ளன. இதுதவிர, மற்ற துறைமுகங்கள் தொடர்பான திட்டங்களுக்கும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.
தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, கடல்சார் போக்குவரத்து, உற்பத்தி கொள்கை உருவாக்கப்படும் என்றும் அறிவித்திருந்தார். அந்த கொள்கை தொடர்பாக, நாங்கள் தற்போது பல்வேறு நிறுவனங்களுடன் பேசி வருகிறோம். தமிழகத்தில் ஒரு முதலீடுதிட்டத்துக்கு ஒப்பந்தம் போட்டதும், தலைமைச்செயலர் தலைமையிலான கமிட்டி ஆய்வு செய்கிறது. திட்டத்துக்கான ஒப்புதல் எளிமைப்படுத்தப் பட்டுள்ளதால்தான், உலகளவில் தொழில் செய்வதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
தேசிய நலன் என்று வரும்போது முதல்வர் எப்போதும் அரசியல் செய்ய விரும்ப மாட்டார். மத்திய அரசுக்கு தேவையான ஒத்துழைப்பு அளிப்போம். கப்பல் கட்டுதல் என்பது இந்தியாவுக்கு மிகவும் முக்கியம். இன்னும் பல கப்பல் கட்டும் நிறுவனங்கள் வர உள்ளன. உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை இந்தாண்டில் நடத்துவது குறித்து ஆலோசித்து வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவி்த்தார்.