அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில், கமலா ஹாரிஸ் மற்றும் டொனால்ட் டிரம்ப் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
அமெரிக்கா முழுவதும் அமைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான வாக்குச் சாவடிகளில் கோடிக்கணக்கான வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர்.
அதே நேரத்தில் இந்த கிரகத்தில் இல்லாத, அதாவது பூமியில் இல்லாத, அமெரிக்க குடிமக்களும் வாக்களிக்க உள்ளனர்.
பூமிக்கு மேலே விண்வெளியில் சுற்றிவரும் இரண்டு அமெரிக்க விண்வெளி வீரர்கள் வாக்களிக்க உள்ளனர்.
சர்வதேச விண்வெளி ஆய்வு மைய்யத்தில் உள்ள சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் ஆகிய இரண்டு விண்வெளி வீரர்களும் இந்த தேர்தலில் வாக்களிக்க ஏற்கனவே விருப்பம் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் பூமியை 17,500 மைல் வேகத்தில் சுற்றிவரும் இந்த சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து எலக்ட்ரானிக் முறையில் வாக்களிக்க உள்ள இவர்களின் வாக்குகள் நாசா உள்ள கணினியில் பெறப்பட்டு பின்னர் அவர்கள் தொடர்புடைய வாக்குச்சாவடிக்கு அனுப்பி வைக்கப்படும்.
வாக்காளர்கள் மற்றும் வாக்கு எண்ணுபவர்கள் மட்டுமே பார்க்க முடிந்த இந்த வாக்குசீட்டு விண்ணில் இருந்து நாசாவுக்கும் பிறகு வாக்குசாவடிக்கும் என மொத்தம் சுமார் 12 லட்சம் மைல் பயணம் செய்ய உள்ளது.
முதல்முறையாக 1997ம் ஆண்டு டேவிட் ஒல்ஃப் விண்வெளியில் இருந்து வாக்களித்த நிலையில் கடைசியாக 2020ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் கேட் ரூபின்ஸ் இதேபோன்று வாக்களித்தது குறிப்பிடத்தக்கது.